சாதிச்சான்றிதழ் கேட்டு உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் சாவு

சாதிச்சான்றிதழ் கேட்டு  உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தவர் சாவு

மகனுக்குச் சாதிச்சான்றிதழ் கிடைக்காத மன உளைச்சலில், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த வாலிபர் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தார். அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

 காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்.   இவர் நேற்று மதியம் சென்னை உயர்நீதிமன்ற நுழைவாயில் முன்பாக சென்றார்.  அப்போது திடீரென்று தான் கொண்டு வந்த பெட்ரோலை தலையில் ஊற்றித் தீயிட்டுக் கொண்டார். மளமளவென உடலில் தீப்பற்றியதும் நீதிமன்றத்தின் உள்ளே வேகமாக ஓடினார்.

இதைக்கண்டு அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியுற்றனர். அப்போது அவர் “நான் மலைக்குறவர் இனத்தைச் சேர்ந்தவன்.  என் மகனுக்குச் சாதிச்சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களில் அலைந்து பார்த்து விட்டேன்.  இதுவரைக்கும் சாதிச்சான்றிதழ் கிடைக்கவில்லை. இந்த மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொள்கிறேன். இனியாவது என் சமூகத்தில் உள்ளவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று அவர் துடிதுடிக்கச் சத்தமாகச் சொன்னார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு கருவி மூலம் அவரின் உடலிலிருந்த தீயை அணைத்து, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர்.  உடல் முழுவதும் ஏற்பட்ட தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேல்முருகன் சிகிச்சைக்குப் பெற்றுவந்தார். சைதாப்பேட்டை பெண் மாஜிஸ்திரேட் அனிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று வேல்முருகனிடம் வாக்குமூலமும் பெற்றுக் கொண்டார். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in