
திருநெல்வேலியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மரணத்திற்கு தவறான உறவு காரணமாக இருக்கலாம் என்னும் கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி குறிச்சிகுளம் பகுதியில் இன்று காலையில் வாலிபர் சடலம் ஒன்று கிடந்தது. அதில் தலை துண்டிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அந்த சடலம் கிடந்த பகுதியில் இருந்து சிறிதுதூரம் தள்ளி தலைமட்டும் தனியாகக் கிடந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் வெள்ளையப்பன் என்ற துரை(30) எனத் தெரியவந்தது.
வெளியூரில் தங்கி வேலைசெய்து வந்த துரை, உள்ளூரில் கோயில் திருவிழா என்பதால் நேற்றுதான் சொந்த ஊரான குறிச்சிகுளத்திற்கு வந்தார். இதனிடையே இன்று அவர் அதிகாலையில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். இதுகுறித்துப் போலீஸார் நடத்திய விசாரணையில், “வெள்ளையப்பன் என்ற துரைக்கும், அதேபகுதியைச் சேர்ந்த இன்னொருவரின் மனைவிக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. இதை அவர் கண்டித்துள்ளார். ஆனால் வெள்ளையப்பன் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. இந்நிலையில்தான் அவர் தலைதுண்டிக்கப்பட்டு இறந்து கிடந்தார். இதனால் தவறான உறவால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்னும் கோனத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.