`உனக்கு குழந்தை இருப்பதால் உயிருடன் விடுகிறேன்'- மிரட்டியவரை சகோதரன் கண்முன்னே கொன்ற கும்பல்

`உனக்கு குழந்தை இருப்பதால் உயிருடன் விடுகிறேன்'- மிரட்டியவரை சகோதரன் கண்முன்னே கொன்ற கும்பல்

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தின் போது பாட்டு சத்தத்தை குறைத்து வைக்குமாறு கூறியதால் ஏற்பட்ட தகராறில் தம்பி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அண்ணன் உயிர் தப்பினார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பல்லாவரம் அடுத்து நாகல்கேணி மீன் மார்கெட் பகுதியில் உள்ள சாலையோரத்தில் ஞானசம்பந்தன்(34), சரவணன்(36) ஆகிய சகோதரர்கள் வசித்து வந்தனர். இவரும் அதே பகுதியில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு அண்ணன், தம்பி இருவரும் மீன் மார்கெட் பின்புறம் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று சரவணன் மற்றும் அவரது தம்பி ஞானசம்பந்தன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ஞானசம்பந்தம் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

சரவணன் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்து அங்கு வந்த சங்கர் நகர் போலீஸார் உயிரிழந்த ஞானசம்பந்தன் உடலை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த சரவணனை சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இக்கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதே பகுதியில் சிலர் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தனர். அப்போது பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார்(35) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதிக சத்தத்துடன் பாட்டு போட்டு ரகளையில் ஈடுபட்டது வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஞானசம்பந்தன் மற்றும் அவரது அண்ணன் சரவணன் இருவரும் ராஜேஷிடம் சென்று பாட்டு சத்தத்தை குறைக்குமாறு கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஞானசம்பந்தன், ராஜேஷிடம் உனக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. அதனால் உன்னை உயிருடன் விடுகிறேன். இல்லையென்றால் உன்னை இப்போது இங்கேயே கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேஷ்குமார், தன்னை ஞானசம்பந்தன் கொலை செய்து விடுவதற்குள் அவனை கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.

தொடர் விசாரணையில் நேற்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சம்பவயிடத்திற்கு வந்த ராஜேஷ்குமார், மது அருந்தி கொண்டிருந்த அண்ணன், தம்பி இருவரை கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் ஞானசம்பந்தன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் தனிப்படை அமைத்து ராஜேஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிவந்த நிலையில் அவர்கள் அதே பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் அங்கு பதுங்கி இருந்த ராஜேஷ்குமார் (30), வெற்றிசெல்வன்(26), ஜெயக்குமார் (24), முகமது அன்வர்(23), முகமது இலியாஸ்(25) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவில் பாட்டு சத்தத்தை குறைக்குமாறு கேட்டதற்கு அண்ணன் கண்முன்னே தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in