`நீ பெரியவனா, நான் பெரியவனா’ போட்டியில் இளைஞர் படுகொலை; சக ஊழியர் கைது: தப்பியோடியவர்களுக்கு வலை!

விவேக்
விவேக்

இன்டர்நெட் அலுவலகத்தில் வைத்து ஊழியர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உடன் வேலை பார்த்தவரின் இந்த வெறிச்செயலால் சக ஊழியர் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்துக்கு அருகே உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவேக் (30). இவருக்கு திருமணமாகி தேவப்பிரியா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். எழும்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் விவேக் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்தார் விவேக். அவரை பணியாற்றும் அலுவலக வளாகத்திலேயே வைத்து ஒரு கும்பல் சரமாரியாகத் தாக்கியது. இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயம்பட்டு, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் விவேக்.

எழும்பூர் காவல் நிலையம் அருகே நடந்த இக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த எழும்பூர் போலீஸார் விவேக்கை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடியவர்களில் ஒருவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(30) என்பது தெரியவந்தது. மேலும் விவேக்கின் கீழ் பணியாற்றி வந்த நபர்கள் இக்கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதும், இவர்களுக்குள் யார் பெரியவன் என்கிற போட்டியில் கொலைச் சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் முன் விரோதம் காரணமாக கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் எழும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவேக் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விவேக்கின் மனைவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கூறி கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in