நள்ளிரவில் வழிமறித்த கும்பல்; கொடூரமாக கொல்லப்பட்ட பெயிண்டர்: முன்விரோதத்தால் நடந்த சோகம்

பிரின்ஸ் லாரா
பிரின்ஸ் லாரா

தஞ்சை அருகே திருக்கானூர்பட்டியில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை மர்ம நபர்கள்  வழிமறித்து வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை அருகே மாதாக்கோட்டை டான்பாஸ்கோ தெருவை சேர்ந்தவர் செபாஸ்டின்  மகன் பிரின்ஸ் லாரா என்கிற சின்னா (28).  இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.  இவருக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு பிரின்ஸ் லாரா தனது இரு சக்கர வாகனத்தில்  திருக்கானூர்பட்டி அருகே   வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த  மர்மநபர்கள் சிலர்  அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். 

இதில் இருசக்கர வாகனத்தில்  இருந்து கீழே விழுந்த பிரின்ஸ் லாரா சத்தம் போட்டு  கத்தியுள்ளார். அந்த நேரத்தில் அந்த வழியாக வாகனங்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த வல்லம் போலீஸார்  வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த  பிரின்ஸ் லாராவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு சிகிச்சை பலனின்றி பிரின்ஸ் லாரா இறந்தார். இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்தும்,  கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது  குறித்தும் தீவிர  விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தஞ்சை பகுதியில் கொலைகள் அதிகரித்திருப்பதை காவல்துறையினர் கவனத்தில் கொண்டு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in