மின்சாரம் தாக்கி இளைஞர் பலி: சரக்கு ரயில் பெட்டி மீது ஏறிய போது விபரீதம்

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி: சரக்கு ரயில் பெட்டி மீது ஏறிய போது விபரீதம்

வாலாஜாபாத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது ஏறிய வாலிபர் உயர் மின்னழுத்தக் கம்பியின் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ரயில் நிலையம் வாகன ஏற்றுமதி முனையமாகச் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த முனையத்திலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வழக்கம் போல வாகனங்களை ஏற்றுவதற்காக வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்தது.

அதில் அடையாளம் தெரியாத சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென ரயில் பெட்டி மீது ஏறினார். அப்போது அவருக்கு அருகிலிருந்த உயர் மின்னழுத்த கம்பி அவர் மீது உரசியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீஸார் அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பற்றிய விவரங்கள் இன்னும் காவல்துறையினருக்குக் கிடைக்கவில்லை. இதையடுத்து இறந்தவரின் விவரங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in