நிறைவடையாத மழைநீர் கால்வாய் பணி: மின்சாரம் தாக்கி வடமாநில செக்யூரிட்டி பலி

நிறைவடையாத மழைநீர் கால்வாய் பணி: மின்சாரம் தாக்கி வடமாநில செக்யூரிட்டி பலி

சென்னை குரோம்பேட்டையில் கடையின் ஷட்டரை திறக்க முற்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த செக்யூரிட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, குரோம்பேட்டை பகுதியில் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ண மோகன்குமார் கடந்த ஐந்து ஆண்டுகளாக வசித்து வந்தார். அவர் குடும்பத்துடன் தங்கி தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். குரோம்பேட்டையில் உள்ள ஏர்டெல் ஷோருமில் கடந்த மூன்று ஆண்டுகளாக இரவு நேரக் காவல் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முதல் கனமழை காரணமாக அந்தப் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கி இருந்தது.

இந்நிலையில் இன்று காலை கடையின் தானியங்கி ஷட்டரை திறக்க சுவிட்சை போட முயன்றுள்ளார். இதையடுத்து அவர் மின்சாரம் தாக்கி விழுந்துள்ளார்.

நீண்ட நேரமாக அதே இடத்தில் அவர் கிடந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது அவரின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

அந்த ஷோரூமிற்கு எதிராகவே மழைநீர் கால்வாய் தோண்டப்பட்டு பணிகள் நிறைவடையாமல் உள்ளது. அதில் மின்சார வயர்களும் செல்வதால் அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என அப்பகுதியினர் தெரிவிக்கிறார்கள். இதையடுத்து அந்த பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in