என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்: தற்கொலைக்கு முன் காவல்துறை அதிகாரிகளுக்கு வாலிபர் அனுப்பிய கடிதம்

என் சாவுக்கு இவர்கள் தான் காரணம்:  தற்கொலைக்கு முன் காவல்துறை அதிகாரிகளுக்கு வாலிபர் அனுப்பிய கடிதம்

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கல்யாண மாப்பிள்ளை வினிஷ் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். வழக்கு ஒன்றில் இருந்து பிணையில் வெளியே வந்த வினிஷ் காவல்துறையின் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி மேலரதவீதியைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மகன் வினிஷ்(30). அந்தப் பகுதியில் கேபிள் தொழில் செய்து வந்த வினிஷ்க்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வினிஷ் நேற்று இரவு பூதப்பாண்டி சுடுகாட்டில் விஷம் குடித்த நிலையில் சடலமாகக் கிடந்தார்.

இதுகுறித்த தகவலறிந்த பூதப்பாண்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 2013.ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டிருந்தார் வினிஷ். அவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து ஜாமீனில் வந்த வினிஷ் மீது அண்மையில் அடிதடி வழக்கு ஒன்று பதிவானது. அதிலும் கடந்த 5-ம் தேதி பிணையில் வெளியே வந்தார். ஆனால் கொலை வழக்கில் சாட்சிகளைக் கலைத்ததாக அடிதடி வழக்கில் ஜாமீனில் வந்த அன்றே, சிறை வாசலில் வைத்து வினிஷ் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். இதனால் போலீஸார் திட்டமிட்டே வினிஷை பழி வாங்குவதாக அவரது உறவினர்கள் பூதப்பாண்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த வினிஷ், தினமும் திருநெல்வேலி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்தார். தொடர் வழக்குகளால் வினிஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வினிஷ் நேற்று இரவு தற்கொலை செய்தார். வினிஷ் தன் தற்கொலைக்கான காரணத்தை பட்டியலிட்டு, அதில் சில காவல்துறை அதிகாரிகளின் பெயர்களையும் குறிப்பிட்டு உயர் அதிகாரிகளுக்கு கடிதமாக அனுப்பி இருப்பதாக அவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in