எங்களுக்கு செய்வினை வைத்த ஊராட்சி தலைவரைக் கொலை செய்து விட்டேன்: சரணடைந்த வாலிபர் திடுக் வாக்குமூலம்

விஜய்
விஜய்

தங்கள் பகுதி  ஊராட்சி மன்றத் தலைவர் தனது குடும்பத்திற்கு செய்வினை செய்து விட்டதாக கருதி அவரை வெட்டிக்கொலை செய்த இளைஞரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட அரையூர் ஊராட்சி மன்றத்தலைவர் பன்னீர்செல்வம் (55). இவரது வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் விஜய் (26). இவர் குடும்பத்திற்கும், பன்னீர்செல்வம் குடும்பத்திற்கும் ஏற்கெனவே இடத்தகராறு உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்ததன் காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் விஜய் குடும்பத்தினர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு புது வீடு கட்டி குடியேறியுள்ளனர். அதில் தொடர்ந்து பிரச்சினைகள் வந்ததாக கூறப்படுகிறது. அதனால்  விஜய்யின் அம்மா , அப்பா இருவரும் அந்த வீட்டில் இல்லாமல் வேறு இடத்தி்ற்குச் சென்று விட்டார்களாக கூறப்படுகிறது. இதனால் தனது குடும்பத்திற்கு பன்னீர்செல்வம் செய்வினை செய்திருக்கலாம் என்று விஜய் கருதியுள்ளார். அதன் காரணமாக  மிகுந்த மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்த விஜய், எப்படியாவது பன்னீர்செல்வத்தை தீர்த்து கட்ட வேண்டும் என்ற திட்டத்தில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று இரவு கொட்டையூர் என்கிற இடத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பன்னீர்செல்வம் மது அருந்தி கொண்டிருந்தபோது மதுபோதையில் அங்கு சென்ற விஜய்,  மறைத்து  வைத்திருந்த அரிவாளை எடுத்து பன்னீர்செல்வத்தின் தலையில் இரண்டு இடங்களில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். 

இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் சரிந்த பன்னீர்செல்வத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பன்னீர்செல்வம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பன்னீர்செல்வத்தை  கொலை செய்த விஜய்,  இரவோடு இரவாக திருவாரூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு  சென்று கொலை செய்த விவரத்தைக் கூறியுள்ளார். அதனையடுத்து அங்கிருந்த போலீஸார்,  வலங்கைமான் காவல் துறையினரிடம் விஜய்யை ஒப்படைத்துள்ளனர்.  இந்த கொலை குறித்து வலங்கைமான் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in