கைது செய்யப்பட்ட கிச்சு
கைது செய்யப்பட்ட கிச்சு

காதலியின் தந்தையைக் கொல்ல பாம்பு வீசிய இளைஞர்

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஒரு தலைக் காதலால் ஏற்பட்ட மோகத்தில் தன்னைக் கண்டித்த பெண்ணின் தந்தையை பாம்பை வீசி எறிந்து கொலை செய்ய முயற்சித்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம் அருகேயுள்ள காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற ராஜூ. இவரது வீட்டுக்குள் நேற்று காலை ஒருவர் திடீரென ஜன்னல் வழியாக பாம்பு ஒன்றை வீசி ஏறிந்திருக்கிறார். ஏதோ சத்தம் கேட்டதால், வீட்டில் இருந்தவர்கள் எழுந்து பார்த்த போது, அருகே பாம்பு இருப்பதை பார்த்துள்ளனர். உடனே அதை அடித்துக் கொன்றிருக்கின்றனர்.  

அதனைத் தொடர்ந்து பாம்பு வீசியவரை பிடிக்க முயன்றனர்.  ஆனால் அதற்குள் அவர் இருசக்கர வாகனத்தில்  தப்பிச் சென்றுவிட்டார். ராஜூவின் வீட்டார் நடந்த சம்பவம் குறித்து இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து போலீஸில் புகார் அளித்தனர். வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்திய போலீஸார் அதே பகுதியைச் சேர்ந்த குண்டு ராவ் என்ற கிச்சு (30) என்பவரை கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரித்ததில், ராஜூ வீட்டுக்குள் பாம்பு வீசியதை ஒப்புக் கொண்டிருக்கிறார். ராஜூவின் மகளை ஒருதலையாக காதலித்து வந்த  கிச்சு அடிக்கடி அவருக்கு இதுகுறித்து தொல்லை கொடுத்திருக்கிறார்.  இதனால் தந்தையிடம் அவரது மகள் கிச்சு குறித்து கூறியுள்ளார். அதனால் கிச்சுவை அழைத்து ராஜு கண்டித்துள்ளார்.  இதனால் ஆத்திரம் அடைந்த கிச்சு அவரை கொல்வதற்காக பாம்பை வீசியதாக கூறியுள்ளார்.  

இதையடுத்து கொலை முயற்சி வழக்கில் கிச்சு சிறையில் அடைக்கப்பட்டார். கொலை செய்ய பாம்பை வீசி எறிந்த இளைஞரின் இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in