
குடிக்க பணம் தர மறுத்ததால் நண்பர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை, பீபிகுளம் வைகை தெரு மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (44). இவருடைய நண்பர் கிருஷ்ணாபுரம் காலனி விநாயகர் தெரு சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் 55. இந்தநிலையில், பீபிகுளம் முல்லைநகரில் உள்ள டாஸ்மாக் கடையில் இருவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது பால்ராஜ் மதுபானம் வாங்க ரஞ்சித்குமாரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், பணம் கொடுக்க ரஞ்சித்குமார் மறுத்து விட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த பால்ராஜ் டாஸ்மாக் அருகே உள்ள ஓட்டலில் இருந்த கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து ரஞ்சித்குமார் மீது ஊற்றினார். இதில் அலறித் துடித்த ரஞ்சித்குமாரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பால்ராஜை கைது செய்தனர்.