வீடு புகுந்து இளம்பெண்ணை கடத்திய 7 பேர் சிறையில் அடைப்பு: 12 பேரை தேடுகிறது போலீஸ்

விக்னேஸ்வரன்
விக்னேஸ்வரன்

மயிலாடுதுறையில ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்ற வழக்கில் 19 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் அவர்களில் 7 பேரை கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை கஞ்சாமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன்(34). இவர் மயிலாடுதுறை மயிலம்மன் நகரில் உள்ள ஒரு பட்டதாரி இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பழகுவதை அப்பெண் நிறுத்தியுள்ளார்.

ஆனால் விக்னேஸ்வரன் விடாமல் பின் தொடர்ந்ததோடு, திருமணம்செய்து தரக்கூறி பெண் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸில் இரண்டு முறை புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது போலீஸார் கண்டித்தும் கேட்காத விக்னேஸ்வரன் கடந்த ஜூலை 12-ம் தேதி அப்பெண்ணை கடத்த முயற்சித்துள்ளார். அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் மீண்டும் மயிலாடுதுறை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து வழக்குபதிவு செய்த போலீஸார், விக்னேஸ்வரனை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு, ஒரு ஸ்கார்பியோ கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சுமார் 19 நபர்கள் அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக கதற கதற தூக்கிச் சென்றனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார் விரைந்து செயல்பட்டு வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து பின் தொடர்ந்து சென்று விக்கிரவாண்டி அருகே காரை மறித்து பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். விக்னேஸ்வரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(35), விழுப்புரம் பில்லூர் காமன் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்தில் மொத்தம் 19 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களில் மயிலாடுதுறை திருவிழந்தூரைச் சேர்ந்த செந்தில்குமார்(25), சேந்தங்குடியைச் சேர்ந்த தினேஷ்குமார்(22), ஆனந்ததாண்டபுரம் சாலையை சேர்ந்த சஞ்சய்(19), பூம்புகார் சாலை பகுதியைச் சேர்ந்த மனோஜ்(24) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுவரை மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மேலும் 12 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in