இனி எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அசத்தல் திட்டம்

இனி எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அசத்தல் திட்டம்

'எங்கிருந்தும் எந்நேரத்திலும்' என்ற இணையவழி சேவையின் மூலம் எங்கிருந்தும் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மக்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்தத் திட்டங்களை பெற முடியாமல் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தவித்து வருகின்றன. இத்திட்டங்களை பற்றி தெரிந்துகொள்வதற்காக அரசு அலுவலகம் செல்லும் பொதுமக்கள் அலைகழிக்கப்படுகின்றனர். அவர்களை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் அவர்கள் அரசு அறிவித்துள்ள நலத் திட்டங்களைப் பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்களின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. இவர்கள் ஏழை மக்களை குறிவைத்து பணம் சம்பாதித்து வருகின்றனர். நேரடியாக விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் மக்கள், இந்த இடைத்தரகர்களை நாடி பணம் கொடுத்து அரசின் திட்டங்களுக்காக விண்ணப்பிக்கின்றனர். இதனை தடுக்க அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உண்டு.

குறிப்பாக, பட்டா பெறவும், மாற்றம் செய்யவும் பொதுமக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பட்டா கோரி வரும் பொது மக்களை குறிவைத்து அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்கள் செயல்படுகின்றனர். அவர்களை தங்கள் பக்கம் திருப்பி பட்டாக்களை நாங்கள் வாங்கி தருகிறோம், 10 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று சர்வ சாதாரணமாகவே அரசு அலுவலகங்களில் கேட்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் பட்டா மாற்றம் செய்யவோ, பட்டா புதிதாக வாங்கவோ அரசு எந்த பணமும் வசூல் செய்வதில்லை. அதேநேரத்தில் அதிகாரிகள், இடைத்தரகர் மூலமாக 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பட்டா மாற்றத்திற்கு மக்களிடம் வசூலித்து வருகின்றனர். வசூலிக்கப்படும் இந்தப் பணத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பங்கு போகிறது.

அதோடு நிற்காமல் இ-சேவை மூலம் பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் மக்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதன் பின்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பட்டா மாற்றம் கோரிய விண்ணப்பங்கள் செல்கின்றன. ஆனால், இந்த விண்ணப்பத்தை அவர்கள் உரிய நேரத்தில் பரிசீலனை செய்வதில்லை. குறிப்பாக, இந்த விண்ணப்பம் விஏஓவுக்கு அனுப்பப்படுகிறது. விஏஓ இந்த விண்ணப்பத்தை சரிபார்த்து சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், விஏஓ-க்கள் விண்ணப்பதாரர்களிடம் பணம் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். இதனால் பட்டா மாற்றலுக்காக மக்கள் பல ஆயிரங்களை செலவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்க வைக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்கிறது. அப்படி இருந்தும் அதிகாரிகள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்வதில்லை. மீண்டும் அவர்கள் பணியில் சேரும்போது லஞ்சம் வாங்கவே செய்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், தமிழக அரசின் சேவையை பெற பொதுமக்கள் எங்கிருந்தாலும் விண்ணப்பிக்கலாம் என்ற இணையதள சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

நில உரிமையாளர்கள் பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்து அவை இணைய வழியில் பரிசீலிக்கப்பட்டு பட்டா மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதள வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்கள், பொது சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுமக்கள் நில உட்பிரிவுக்கான கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பட்டா உத்தரவின் நகல் பட்டா புலப்படச்சுவடி ஆகியவற்றை `எங்கிருந்தும் எந்நேரத்திலும்' எந்த இணைய வழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பொது சேவை மையங்களுக்கு செல்வதும், வட்ட அலுவலகங்களில் இடைத்தரகர்களால் அவதிப்படுவதும் தவிர்க்கப்படும்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற நில ஆவணங்கள் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலத்தில் கணினிபடுத்தப்பட்டு தமிழ்நிலம் (நகர்ப்புறம்) என்னும் மென்பொருள் மூலம் படிப்படியாக இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. கணினிப்படுத்தப்பட்ட பிளாக் வரைபடங்களை தனித்தனி நகரப் புலங்களுக்கான வரைபடங்களாக https://eservices.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளும் இப்புதிய வசதி மூலமாக பொதுமக்கள் நகர்ப்புற நில வரைபடங்களை இணைய வழியில் கட்டணமின்றி பெறலாம். மேலும், இவ்வரைபடம், மனை அங்கீகாரம் மற்றும் வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு அத்தியாவசியமாக விளங்குவதுடன் பொதுமக்கள் நகர நில வரைபடம் பெறும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகம் வருவதும் தவிர்க்கப்படும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in