ஆரியர் - திராவிடர் எனும் விவாதம் போலியானது: யோகி ஆதித்யநாத் பேச்சு

ஆரியர் - திராவிடர் எனும் விவாதம் போலியானது: யோகி ஆதித்யநாத் பேச்சு
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

ஆரியர் - திராவிடர் எனும் விவாதம் போலியானது என்றும், ஆரியர்கள் படையெடுப்பு எனும் கருத்தாக்கமே தவறு என்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். பிரிட்டிஷ் அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இந்தக் கருத்தாக்கத்தை இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் உருவாக்கினர் என்றும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கோரக்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்த மஹந்த் திக்விஜய் நாத்தின் 52-வது நினைவுதின விழா, கோரக்பூரில் நடந்துவருகிறது. இந்நிகழ்ச்சியில் மஹந்த் அவைத்யநாத்தின் ஏழாவது நினைவுதினமும்அனுசரிக்கப்படுகிறது. இதன் இரண்டாவது நாளான நேற்று (செப்.18), யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் என இந்து மதத்தின் நூல்கள் எதுவும், ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று கூறவில்லை. இத்தனைக்கும் ராமரை ஆரியபுத்திரர் என்றே ராமாயணத்தில் சீதை குறிப்பிடுகிறார். ஆனால், சூழ்ச்சி நிறைந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இடதுசாரிக் கொள்கை கொண்ட வரலாற்றாசிரியர்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் எனும் கருத்தாக்கத்தை உருவாக்கச் செய்திருக்கிறார்கள். உண்மைத் தகவல்கள் இப்படி திரிக்கப்பட்டது வரலாற்றின் கறுப்பு அத்தியாயம் ஆகும். இந்தச் சதி, இந்தியர்கள் பெருமைமிக்க தங்கள் கடந்த காலத்தை அறிந்துகொள்ள முடியாமல் தடுத்துவிட்டது” என்று கூறினார்.

மேலும், ஆரியர் - திராவிடர் எனும் விவாதம் போலியானது; ஆதாரமற்றது என்று கூறிய யோகி ஆதித்யநாத், இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான டிஎன்ஏ இருப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

உத்தர பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கோரக்பூர் நகரில் அமைந்திருக்கும் கோரக்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராக இன்றுவரை யோகி ஆதித்யநாத் பொறுப்புவகிப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.