யேசுதாஸ் ஏராளமான இந்து பாடல்களைப் பாடியுள்ளார்: அமைச்சர் மனோ தங்கராஜூக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் குட்டு

யேசுதாஸ் ஏராளமான இந்து பாடல்களைப் பாடியுள்ளார்: அமைச்சர் மனோ தங்கராஜூக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் குட்டு

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் மாற்று மதத்தினர் பங்கேற்க தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவில் பிரம்மபுரத்தை சேர்ந்த சி.சோமன் உயர்நீதிமன்ற கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

அதில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ஜூலை 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக பக்தர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுவாக குமரி மாவட்ட கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய முடியாது. ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் தான் பூஜைகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட பூஜாரிகள் மட்டுமே பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும்.

இந்நிலையில் கும்பாபிஷேகத்துக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மாற்று மதத்தைச் சேர்ந்தவர். கும்பாபிஷேக விழா அரசு விழாவாக நடைபெறும் போது வழக்கமான சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படாமல் கோயிலில் புனிதம் கெடுவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் கோயில் வளாகத்தில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்தனர்.

அதில், "இந்து கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர் நுழைய வேண்டாம் என அறிவிப்பு பலகைகள் கோயில்களின் முன்பு வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை விதிகளில் சொல்லப்படவில்லை. 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், மக்கள் இறை நம்பிக்கை கொண்டவர்கள் கோயிலுக்குச் செல்லும்போது, அவர்களின் மதத்தை உறுதி செய்வது பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்" என்றனர்.

மேலும், "பிரபல பாடகர் யேசுதாஸ் வேறு மதத்தைச் சேர்ந்தவர் தான். இருப்பினும் அவர் ஏராளமான இந்து கடவுள் பாடல்களைப் பாடியுள்ளார். அவரது பாடல்கள் கோயில்களில் ஒலிக்கப்படுகின்றன. வேளாங்கண்ணி தேவாலயத்திற்கும், நாகூர் தர்காவிற்கும் ஏராளமான இந்துக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். எனவே, இந்த விவகாரத்தை நீதிமன்றம் குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை. பரந்த மனப்பான்மையுடன் அணுக வேண்டும். எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in