எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவா? பின்னணி என்ன?

எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவா? பின்னணி என்ன?

எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா முன்னிறுத்தப்படலாம் எனும் ஊகங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், இதன் பின்னணி என்ன என்பது குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் எதிர்க்கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படும் வாய்ப்பை சரத் பவார், ஃபரூக் அப்துல்லா, கோபால் கிருஷ்ண காந்தி ஆகியோர் மறுதலித்துவிட்ட நிலையில், இறுதியாக யார் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதுகுறித்து முடிவெடுக்க எதிர்க்கட்சிகள் இன்று மதியம் சந்தித்துப் பேச முடிவெடுத்திருந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த யஷ்வந்த் சின்ஹா அக்கட்சியின் எல்லா பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் அவர், ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் எனக்கு அளித்த மரியாதைக்கும் மதிப்புக்கும் நான் மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தற்போது, தேசிய அளவில் ஒரு மிக முக்கியப் பணிக்கான நேரம் வந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக உழைக்க, கட்சியிலிருந்து நான் விலகியாக வேண்டும். இதை மம்தா நிச்சயம் அங்கீகரிப்பார் என நம்புகிறேன்' என அதில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா முன்னிறுத்தப்படலாம் எனப் பேசப்படுகிறது.

அவரது பெயரை எதிர்க்கட்சிகள் பரிசீலிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அவரது இந்த அறிவிப்பும் அதை உறுதிசெய்வது போல் அமைந்திருக்கிறது. இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலும் ஆலோசனை நடந்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து யஷ்வந்த் சின்ஹா அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் இன்று நடக்கும் கூட்டத்தில் மம்தா பானர்ஜிக்குப் பதிலாக, அவரது மருமகனும் திரிணமூல் காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளருமான அபிஷேக் பானர்ஜி கலந்துகொள்கிறார். யஷ்வந்த் சின்ஹா பெயரைப் பரிந்துரைப்பது தொடர்பாக அவர் ஏற்கெனவே முடிவெடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

திரிணமூல் காங்கிரஸிலிருந்து யஷ்வந்த் சின்ஹா விலகியிருப்பதால், பொது வேட்பாளராக அவரை முன்னிறுத்துவதில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே தயக்கம் இருக்காது என்றும் கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in