‘தோல்விக்கு ராகுல் மட்டும்தான் காரணம் என எப்படிக் கூற முடியும்?’

குலாம் நபி ஆசாதுக்கு சச்சின் பைலட் கேள்வி
சச்சின் பைலட்
சச்சின் பைலட்

காங்கிரஸ் கட்சியிலிருந்து நேற்று விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு ராகுல் காந்திதான் காரணம் எனக் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தேர்தல் தோல்விக்குத் தனிநபரைப் பொற்றுப்பாக்குவது தவறு என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும், உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்திய ஜி-23 தலைவர்களில் முக்கியமானவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துவரும் தொடர் தோல்விகள் குறித்து அக்குழுவினர், கட்சித் தலைமைக்குப் பல்வேறு விதங்களில் உணர்த்திவந்தனர்.

இந்த ஆண்டு நடந்த 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தித் தலைவர்களான ஜி-23 தலைவர்கள் கட்சித் தலைமை குறித்து மீண்டும் விமர்சிக்கத் தொடங்கினர். ‘அனைவரையும் உள்ளடக்கியதான கூட்டுத் தலைமை மற்றும் அனைத்து மட்டங்களிலும் முடிவெடுக்கக்கூடிய சூழல் அடங்கிய மாதிரியைக் காங்கிரஸ் கட்சி கைக்கொண்டால்தான், முன்னேற்றம் காண முடியும்’ என்றும் இக்குழுவினர் அறிக்கை வெளியிட்டனர். கட்சியைப் பலப்படுத்தவே விரும்புவதாகவும், பின்னடைவை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

இதற்கிடையே, செப்டம்பர் 20-ம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் காங்கிரஸ் கட்சியினர் கூறியிருந்தனர். கூடவே, குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காஷ்மீரிலும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடத்தப்படலாம் எனச் செய்திகள் வெளியாகின. இந்தச் சூழலில், காஷ்மீர் முன்னாள் முதல்வரான குலாம் நபி ஆசாத் சமீபத்தில் காஷ்மீர் பிரச்சாரக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், சில மணி நேரத்திலேயே அவர் அந்தப் பதவியிலிருந்து விலகினார்.

இந்தச் சூழலில், நேற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்திப் பதவிகளிலிருந்தும் விலகி காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தார் குலாம் நபி ஆசாத். கூடவே, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய 5 பக்கக் கடிதத்தில், ராகுல் காந்தியை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். சோனியா காந்தி பெயரளவுக்குத்தான் மதிக்கப்படுகிறார் என்றும், முக்கியமான எல்லா முடிவுகளும் ராகுல் காந்தி அல்லது அவரது பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்களால்தான் எடுக்கப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

ராகுலின் அரசியல் வருகை - குறிப்பாக 2013 ஜனவரியில் கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டது ஆகியவற்றைத் தொடர்ந்தே கட்சியில் சரிவு ஏற்பட்டதாக அக்கடிதத்தில் கூறியிருந்த குலாம் நபி ஆசாத், கட்சியில் இதற்கு முன்பு நிலவிய ஆலோசனை நடைமுறையை ராகுல் முற்றிலுமாகத் தகர்த்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு ஆதரவானது எனக் கூறி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தின் நகலை, ஊடகங்கள் முன்னிலையில் ராகுல் காந்தி கிழித்தெறிந்ததைத் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த குலாம் நபி ஆசாத், 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்த படுதோல்விக்கு ராகுலின் அந்தச் செயல்தான் முக்கியக் காரணம் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி மீதான குலாம் நபி ஆசாதின் குற்றச்சாட்டு தனிப்பட்ட முறையில் குறிவைத்து செய்யப்பட்ட அவதூறு என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். குலாம் நபி ஆசாதின் கடிதம் மிகவும் துரதிருஷ்டவசமானது என்றும், பாஜக அரசின் தவறான ஆட்சிக்கு எதிராகக் களமாட காங்கிரஸ் கட்சி தயாராகிவந்த நிலையில், குலாம் நபி ஆசாத் தனது கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டார் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.

“குலாம் நபி ஆசாத் உட்பட நாங்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியில் இருந்ததுடன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் அங்கம் வகித்தோம். எனவே, 2014 மக்களவைத் தேர்தல் தோல்விக்கு ஒருவரை மட்டும் குற்றம்சாட்டுவது சரியல்ல” என்றும் சச்சின் பைலட் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in