ரூபாய் நோட்டில் கிறுக்கினால் செல்லுமா?: அரசு தரப்பில் அளித்த விளக்கம்!

ரூபாய் நோட்டில் கிறுக்கினால் செல்லுமா?: அரசு தரப்பில் அளித்த விளக்கம்!

கரன்சி நோட்டில் கிறுக்கினால் செல்லுமா செல்லாதா? இதுதான் நம்மில் பலரின் தலைக்குள் குடையும் கேள்விகளில் ஒன்றாக நீடிக்கிறது. இது தொடர்பான வதந்திகளும் குழப்பங்களும் கூட ஏராளம். உண்மை என்ன என்பதை அரசு தரப்பிலேயே தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு வரை ரூபாய் நோட்டில் கிறுக்குவது என்பது சாதாரணமாக இருந்தது. நோட்டுக்கட்டின் மீதாக அதன் எண்ணிக்கை முதல் கணக்கு வழக்கு வரை பலதும் குறிப்புகளாக எழுதி வைப்பார்கள். இன்னும் சிலர் காதல் விடு தூது முதல் கடவுள் பிரார்த்தனை வரை கண்டதையும் எழுதி திருப்தி அடைவார்கள்.

இதற்கிடையே நோட்டில் கிறுக்குவதற்கு எதிரான அறிவுறுத்தல்கள் வெளியாயின. வங்கிகள் தரப்பில் ரூபாய் நோட்டில் கிறுக்குவதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முன்னதாக ரூபாய் நோட்டில் பின் அடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது. தொடர்ச்சியாக கரன்சி தாளில் எழுதுவதும் குறைந்து போனது.

ஆனபோதும் அங்கும் இங்குமாக கரன்சி தாளில் ஆட்டோகிராஃப் வரைவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி அதிகம் கிறுக்கப்பட்ட ரூபாய் தாள்கள் செல்லாது என்றொரு தகவல் அண்மையில் பொதுவெளியில் அதிகம் பரப்பப்பட்டது. அதன் உச்சமாக ரிசர்வ் வங்கியே தனது அதிகாரபூர்வ தகவல் ஒன்றில், ’ரூபாய் நோட்டில் ஏதேனும் எழுதி இருந்தால் அந்த கரன்சி தாள் அதன் மதிப்பை இழக்கும்’ என்று அறிவித்ததாக, வாட்ஸ் ஆப் தகவல்கள் அதிகம் பரவின.

இது பொதுமக்கள் முதல் வங்கிகள் வரை பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. இப்படித்தான் 10 ரூபாய் நாணயங்களை முன்வைத்து பரவிய வதந்தி இன்னும் ஓய்ந்தபாடில்லை. விபரமறிந்தோர் முதல் வணிக நிலையங்கள் வரை மேற்படி நாணயத்தை புறக்கணிப்பது நீடித்து வருகிறது. அடுத்தபடியாக ரிசர்வ் வங்கியின் இந்த தகவலும் மக்கள் மத்தியில் அதிகம் குழப்பங்களை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான திரிக்கப்பட்ட தகவல்களை ஆராயும், பிரஸ் இன்பர்மேஷன் பீரோ அமைப்பின் உண்மை கண்டறியும் பிரிவின் கவனத்துக்கு இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்பட்டது. பொதுவெளியில் பரவும் தகவல்களை ஆராய்ந்த உண்மை கண்டறியும் பிரிவு, அது தொடர்பான விளக்கத்தையும் தற்போது வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, ரிசர்வ் வங்கி பெயரிலான அறிவிப்பு போலியாகும். கரன்சி தாளில் எழுதினால் அது செல்லாது என்பதும் தவறான தகவல் ஆகும். பொதுவாக, ஒரு கரன்சி தாள் கூடுதல் காலத்துக்கு உழைக்க வேண்டி, அதில் எழுதுவதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆனால் அப்படியும் கரன்சி தாளில் ஏதேனும் எழுதப்பட்டிருப்பின் அது அந்த தாளின் மதிப்பை எந்த வகையிலும் பாதிக்காது. அந்த நோட்டி செல்லாது என எவரும் மறுக்கவும் இயலாது.

எனவே கரன்சி தாளின் வாழ்நாள் கருதி பொறுப்புணர்வோடு அதில் கிறுக்காது தவிர்ப்போம். அப்படியும் கிறுக்கிய தாள்கள் ஏதேனும் நம் கைக்கு வந்தால், அது செல்லுமா செல்லாதா என்ற கவலையையும் தவிர்ப்போம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in