பிரபல எழுத்தாளரும், கிழக்கு பதிப்பகத்தின் உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. எழுத்தாளர், சமூக ஆர்வலரான இவர் நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். சமீபத்தில் மணிப்பூர் வன்முறை மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி இன்று காலை மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன் படி, 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுவது), 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை வளர்ப்பது மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) , 505 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்) ஆகியவை முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்ரி சேஷாத்ரி கைதை கண்டித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி ஷேசாத்திரியை தமிழக போலீஸார் இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக போலீஸாரின் பணியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.