பெண் குழந்தைகள்... பேசும் தெய்வங்கள்!

சர்வதேசப் பெண் குழந்தைகள் தின சிறப்புப் பகிர்வு
பெண் குழந்தைகள்... பேசும் தெய்வங்கள்!

குழந்தைகளே வரம்தான். எத்தனை காசு பணம் இருந்தாலும் எவ்வளவு வீடும் வாசல் இருந்தாலும் அங்கே பிள்ளைச் செல்வம் இருந்தால்தான் அது பூர்த்தியாகும். இல்லாது போனால் மனதில் ஒரு நிறை இருக்காது. ஆக, குழந்தைகளே வரம். அதிலும் பெண் குழந்தைகள் வரங்களிலும் வரம்.

பெண்களை சக்தியாகப் போற்றுகிறது ஆன்மிகம். ஒரு வீட்டின் மாப்பிள்ளையைப் பெரிதாக ஏதும் சொல்லிப் பெருமைப்படுத்துகிறோமோ இல்லையோ... ஆனால் அந்த வீட்டின் மருமகளை, ‘வீட்டுக்கு வந்த மகாலட்சுமி’ என்று போற்றிக் கொண்டாடுகிறோம். அதேபோல்தான் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தால், ‘சிங்கக்குட்டி பொறந்திருக்கான்’ என்றெல்லாம் சொல்லி வீரத்தையும் ஆண் சிந்தனையையும் மேலோங்கச் சொல்வார்கள். அதே பெண் குழந்தை பிறந்துவிட்டால், ‘நம்ம வீட்டுக்கு மகாலட்சுமியே மகளா வந்து பொறந்திருக்கா’ என்று பெருமிதம் கொள்வார்கள்.

பெண் குழந்தைகளை தேவதைகளுக்கு நிகரானவர்களாகவே சொல்கிறது ஆங்கில இலக்கியம். ‘ஏஞ்சல்’ என்றுதான் பெண் குழந்தைகளை வர்ணிக்கிறது. அம்மாவுக்கும் மகனுக்கும் அட்டகாசமான பந்தப் பிணைப்பு இருக்கும். எனவே, ஓர் ஆண் தன் மகளின் ஒவ்வொரு செயலிலும் அம்மாவைத் தேடுகிறான்; தன் மகளைத் தனது அம்மாவைத் தொடர்புப்படுத்திப் பார்க்கிறான். அதனால்தான் ஒருகட்டத்தில், ‘என் தாயீ’ என்று பெண் குழந்தைகளைக் கொஞ்சுகிறார்கள். ஒருவீட்டில் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருந்தால், அங்கே பெண் குழந்தைகளுக்கு கூடுதல் கவனிப்பு என்பது இருக்கும். இதை பாரபட்ச பாசம் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது.

‘’சாயல்களால் நிறைந்தது இந்த உலகம். உங்கள் மகனிடம் உங்கள் அப்பாவைத் தேடுகிறீர்கள். உங்களைத் தேடுகிறீர்கள். அதேபோல், உங்கள் மகளிடம் உங்களுடைய அம்மாவைக் காண்கிறீர்கள். அம்மாவாகவே அவர்களைப் பார்க்கிறீர்கள்’’ என்கிறார் தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.

அம்மாவுக்கும் மகனுமான பிணைப்பு, அப்பாவுக்கும் மகளுக்குமான பிணைப்பு என்றுதான் இந்தச் சமூகம் பார்க்கிறது. இதே சமூகம்தான், அப்பாவிடம் மகள் எதையெல்லாம் சொல்லவேண்டும், அம்மாவிடம் எதையெல்லாம் சொல்லவேண்டும் என்று பகுத்துப் பிரித்துவைத்து, சொல்லிக் கொடுத்திருக்கிறது.

எழுத்தாளர் பாலகுமாரன் ‘தாயுமானவன்’ எனும் நாவல் எழுதியிருப்பார். அதில், வேலைக்குச் செல்லும் அம்மா, வீட்டில் வேலையில்லாமல் இருக்கும் அப்பா என்று கதை மாந்தர்களைக் காட்டியிருப்பார். மகளின் பள்ளியில் இருந்து ஆள் வந்து, ‘அவங்க அம்மா இல்லியா?’ என்று கேட்பார். ‘நான் அவளோட அப்பா. நான் வரேன், என்ன விஷயம்?’ என்பார். ‘கூட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க’ என்று சொல்ல, அப்பா பரமு ஸ்கூலுக்குக் கிளம்பிச் செல்வார்.

அங்கே பள்ளி முதல்வர் பெண்மணி, ‘பொண்ணோட அம்மாவைக் கூட்டிக்கிட்டு வரச்சொன்னா, அப்பாவைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க’ என்று கத்துவார். ‘எனக்கும் பொண்ணுதானே அவ’ என்பார். ’இதெல்லாம் லேடீஸ் மேட்டர்ங்க. உங்க பொண்ணு பெரியவளாயிட்டா’ என்பார்கள். ‘அம்மாதான் வரணும். உங்களைப் பாத்தா மிரண்டு போயிரும் பொண்ணு’ என்பார்கள். ‘என் பொண்ணு என்னைப் பாத்து ஏன் மிரளப்போறா’ என்று வாதிடுவார்.

பிறகு பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்வார். மனதில் பல எண்ணங்கள் எழும். ‘இனி, நமக்கும் மகளுக்குமான உறவில் லேசாக கோடு கிழிக்கப்பட்டுவிட்டதா? இனி அவளை ஒரு பெண் போல் பார்க்கவேண்டுமா? என் மகள் என் தொப்பையைக் குத்தி விளையாடுவாளே... இனி அதெல்லாம் நடக்காதா?’ என்றெல்லாம் கதையைப் படித்துவிட்டு ஏங்கிய தகப்பன்கள் ஒவ்வொருவரும் ‘தாயுமானவன்’களாக கனத்துப் போவார்கள்.

அப்பனுக்கும் மகளுக்குமான பந்தம் சொல்லில் அடங்காதது. ‘என் அம்மாவின் சாயலை என் மகளிடம் பார்க்கிறேன்’ என்று தகப்பன் பெருமிதம் கொள்ளும் அதேவேளையில், நாளை நான் வளர்ந்து பெரியவளாகிவிட்ட பிறகு, ‘என் அப்பாவின் குணங்களுடன் ஒருவன் கணவனாகக் கிடைக்கவேண்டும்’ என்று மகள் ஏங்குகிறாள். திருமணமாகி, எங்கோ ஒரு ஊருக்கு, புகுந்த வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையிலும், தன் கணவனை ஒரு தராசுத் தட்டிலும் அப்பாவை இன்னுமொரு தராசுத் தட்டிலும் வைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதுதான் அப்பாவுக்கும் மகளுக்குமான பந்தம் தொடர்கதையாக, அன்பின் நீட்சியாகப் போய்க்கொண்டே இருக்கிறது.

பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி, கல்லூரிக்கு அனுப்பி, ஸ்பெஷல் கோர்ஸ்களுக்கு அனுப்பி... என ஒவ்வொரு தருணங்களிலும் அப்பா மட்டுமின்றி அம்மாவின் மனசும் அவர்களைச் சுற்றியே இருக்கும். இங்கே ஆண் என்பவன் காபந்து செய்பவன். பெண் என்பவள் ஆணுடைய பாதுகாப்பில் வாழ்பவள் என்பதையெல்லாம் கடந்து, பெற்றோர் என்பவர்கள், பெண் குழந்தைகள் கூடுதல் அக்கறையுடனும் அன்புடனும் நடத்துகிறார்கள் என்றுதான் உணரவேண்டியிருக்கிறது.

பெண் குழந்தைகள் இருக்கிற வீட்டில் அவர்கள்தான் வக்கீல். அவர்கள்தான் நீதிபதி. அவர்கள்தான் நடுவர். அம்மாவை அப்பா கேலி செய்யும்போது அப்பாவுடன் சேர்ந்துகொண்டு கேலி செய்கிற பெண் குழந்தைகள், அதே அப்பா அம்மாவிடம் சண்டையிடும் போது, அவர்கள் அம்மாவின் பக்கம் நின்று அம்மாவுக்காக அல்லது அப்பாவுக்காக என்று வாதாடி, ஒரு தீர்ப்பையும் கொடுத்துவிடுகிறார்கள். பெண் குழந்தைகள் செய்யும் மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று.

பெற்றோர்கள், தங்கள் வயது மூப்புக் காலங்களில், மகனின் அரவணைப்பை நாடுவது இயல்பானதுதான். நம் சமூக வரையறைகளில் இதுவும் ஒன்றாகத்தான் இருந்துவருகிறது. ஆனால் எனக்குத் தெரிந்து, மூன்று மகன்களைப் பெற்றெடுத்த அப்பா அம்மாவை ஒரு மகன்கூட பார்த்துக்கொள்ளவில்லை. மூவரும் ஒவ்வொரு ஊரில் இருக்கிறார்கள்.

கணவரை இழந்து நிற்கும் அந்த அம்மாவை, ஆளுக்கு நான்கு மாதம் என்று பந்துவிளையாட்டுப் போல் கூட பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் சுதந்திரமாகவும் எந்தக் கூச்சமும் இல்லாமலும் மகளின் வீட்டுக்கு வந்து இரண்டு மூன்று மாதங்கள் இருக்கிறார்கள்.

இதேபோல், ஒரு தம்பதிக்கு ஒரேயொரு மகன். திருமணமாகும் வரை அன்பாக அவர்களைப் பார்த்துக்கொண்ட பையன், திருமணத்துக்குப் பிறகு அப்படியே மாறிப்போனான். ‘’எம் புள்ள எங்ககிட்ட பேசியே வருஷமாச்சு’’ எழுபது வயதைக் கடந்து, தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்குத் தெரிந்த பெண்மணிக்கு இரண்டு மகள்கள். இருவருமே திருமணம், குழந்தைகள் என்று செட்டிலாகிவிட்டார்கள். இந்த நிலையில் அவரின் அப்பாவும் இறந்துவிட, அம்மா மட்டும் வீட்டில் தனியாக இருக்கிறார். மூட்டு வலி, இதயத்தில் கோளாறு என்று உடம்பில் பிரச்சினைகள். பார்த்துக்கொள்ள ஒருவருமே இல்லையே... என்று ஏங்கிக்கொண்டும் பயந்துகொண்டும் வாழ்ந்து வருகிறார். யாராவது ஒரு பெண்ணிடம் இருந்துவிடலாமே... என்று சொன்னதற்கு, ’அவ புருஷன், மாமனார், மாமியார், குழந்தைகள்னு நிம்மதியா இருக்கா. நான் அங்கே போய் நல்லாருக்கற குடும்பத்துல ஏதும் குழப்பம் வந்துடக்கூடாது. என்னைச் சுமையா நினைச்சிடக்கூடாது’’ என்று சொல்லிவிட்டு விசும்பி அழும் பெண்மணியைத் தேற்றமுடியவில்லை. தனக்கு மூப்பு, உடல்நலமின்மை, தனிமை, வெறுமை என்றிருந்தாலும் மகள்கள் செளக்கியமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற பெற்றோர்களும் பெண்குழந்தைகளுக்கு வரம்தான்!

ஐந்து குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்குகிற வேளையில், அம்மா இறந்துவிட, மூத்த மகள், அந்த வீட்டுக்கே தாயாகிவிடுகிறாள். படிப்பை நிறுத்துகிறாள். ஒவ்வொருவரையும் வளர்த்துக்கு ஆளாக்குகிறாள். திருமண சிந்தனைகளில் இருந்து விடுவித்துக் கொள்கிறாள். அப்பாவும் சகோதரியும் சகோதரர்களும் என்று அந்த வீட்டையே நிர்வகித்து, அப்பாவுக்காகவும் சகோதர உறவுகளுக்காகவும் தன்னையே ஒப்புக்கொடுக்கிற பெண்களை, தேவதைகளாக என்றில்லாமல், தெய்வங்களாகத்தான் பார்க்கவேண்டும்.

‘பெண் குழந்தை பொறந்துருச்சா?’ என்று கள்ளிப்பாலுக்குச் சென்ற ஒருகாலமும் இருந்தது. ‘பொம்பளப் புள்ளையைப் பெத்துட்டு நாலு காசு சேக்கவேணாமா?’ என்று ‘கல்யாணம் செஞ்சி வைச்சிட்டா, ஒரு பாரம் இறங்கினாப்ல...’ என்று பெண் குழந்தைகளைப் பாரமாக நினைத்த காலமும் மலையேறிப் போச்சு. ‘பொம்பளப் புள்ளையா... அதுங்கதாம்பா எதிர்காலத்துல நமக்கு ஒருவேளை கஞ்சியாவது ஊத்தும்’ என்று சொல்லும் காலமிது.

பெண் குழந்தைகள் வீட்டைக் கவனித்துக்கொள்கிறார்கள். தங்கள் கல்வியில் மூழ்குகிறார்கள். படித்து, நல்ல வேலைக்குச் செல்கிறார்கள். நல்ல இடத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிறார்கள். ‘எதிர்காலத்துல நம்மளை பாத்துக்கறாங்களோ இல்லியோ, நம்ம குழந்தைங்க நல்லபடியா கஷ்டமில்லாம, செளக்கியமா வாழ்ந்தாப் போதும்’ என்று நினைக்கிற பெற்றோர்களின் உலகில், பெண் குழந்தைகள் எப்போதுமே, எல்லாக் காலத்திலுமே தேவதைகள்தான்; பேசும் தெய்வங்கள்தான்!

- சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் (அக்டோபர் 11) பெண் குழந்தைகளுக்கு வாழ்த்துகள். பெண் குழந்தைகளைப் பெற்ற மகராசிகளுக்கு கைகுலுக்கலுடன் சேர்ந்த வாழ்த்துகள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in