
தலைசிறந்த விஞ்ஞானி, மிகச்சிறந்த ஆசிரியர் மற்றும் நாட்டின் 11வது குடியரசுத் தலைவர் என பல முகங்கள் கொண்டவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். இந்த அடையாளங்களை விட அவர் அதிகமாக மாணவர்களை நேசித்த காரணத்தினால், கலாம் பிறந்த நாளை உலக மாணவர் தினமாக கொண்டாடுகிறோம். அப்துல் கலாமின் நினைவுகளையும், கனவுகளையும் நெஞ்சில் ஏந்தி, உத்வேகம் கொள்வதற்கான நாளாகவும் அக்டோபர் 15 நாளை அனுசரிப்போம்.
ஏவுகணை மனிதர், விண்வெளி விஞ்ஞானி, அரசின் அறிவியல் ஆலோசகர், நாட்டின் குடியரசுத் தலைவர், பத்ம் பூஷன்; பத்ம விபூஷன்; பாரத் ரத்னா என விருதுகளை அலங்கரித்தவர்... இத்தனை சிறப்புகள் கொண்டிருந்த போதும், ஒரு ஆசிரியராக இருக்கவே அவர் அதிகம் விரும்பினார்.
குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடிந்ததுமே, ஓய்வை விரும்பாது உடனடியாக ஆசிரியராக பொறுப்பேற்றார். ஷில்லாங்கில் ஐஐஎம் மாணவர்கள் மத்தியில் பேசும்போது மேடையிலேயே உயிர் பிரிந்தார். இந்த உலகிலிருந்து விடைபெறும் கணத்தைக்கூட மாணவர்கள் மத்தியிலும், அவர்களுக்கான உரையாடலிலும் கழித்த மாமனிதரின் பிறந்தநாளை உலக மாணவர் தினமாக கொண்டாடுவது மெத்தப் பொருத்தமானது.
அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், என்கிற ஏபிஜே அப்துல் கலாம் மிகவும் எளிய தமிழ் குடும்பத்தில் பிறந்தவர். 1931, அக்டோபர் 15 அன்று, ராமேஸ்வரத்தில் சாதாரண மீனவக் குடும்பத்தில் வறுமையோடு தோன்றியவர். அரசுப் பள்ளியில் படித்தவர். சிறுவயதில் செய்தித்தாள் விநியோகித்து உழைப்பை தொடங்கியவர்.
பரந்த கடலும், அகன்ற வானும், காய்ந்த வயிறுமாக அவருக்குள் ஏராளமான கனவுகளை உருவாகின. அந்த கனவுகள் அவரை உறங்க விடாது துரத்தின. சிறுவயதில் தான் கண்ட கனவுகளை விரைந்து அடைந்தார். அது போன்ற வீரியக் கனவுகளையும், அதை அடையும் வழிகளையும் தன்னைப் போன்ற எளிய மாணவர்களுக்கும் கடத்த விரும்பினார். அதற்கான பாதையில் ஏவுகணை, செயற்கைக்கோள், அணுகுண்டு சோதனை என எத்தனையோ சாதனைகள் கடந்தபோதும், எதிலும் திருப்தி கொள்ளாது, வாழ்நாள் முழுக்க மாணவர்களுக்காகவே இயங்கினார்.
எங்கே சென்றாலும், மாணவர்களையும், குழந்தைகளையும் கண்டால் உற்சாகம் கொள்வார். அவர்களிடம் கேள்விகளை எழுப்பி, பதிலை விதைப்பார். அவர்களை கேள்வி கேட்கத் தூண்டுவார். அந்த கேள்விகளுக்காக சிந்திக்கத் தூண்டுவார். அந்த சிந்தனைகளுக்காக கனவு காணச் சொல்வார்.
‘கனவு காண்போம். கனவுகளே எண்ணங்களாகவும், எண்ணங்களே சீரிய செயல்களாகவும் விளைகின்றன’
‘நம் எல்லோருக்கும் சமமான திறமைகள் இல்லாது போகலாம்; ஆனால் அந்த திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான சம வாய்ப்புகள் நம் எல்லோருக்கும் இருக்கிறது’,
’உங்களை தூங்க விடாமல் செய்வது எதுவோ; அதுவே கனவு!’
‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’
அவரது கூற்றின்படியே எளிய மீனவக் குடும்பத்தில் பிறந்தவர், தனது கனவுகளின் வழியே வாழ்வின் உயர் இலக்குகளை வென்றார். அதற்கான வழிமுறைகளை மற்றவர்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார். உலக மாணவர் தினத்தில் அப்துல் கலாம் கண்ட கனவுகளை நெஞ்சில் ஏந்துவோம். உறங்கவிடாத கனவுகளை விரைந்து சாதிப்போம்!