அக்டோபர் 12 : உலக ஆர்த்ரைடிஸ் தினம்... மூட்டு வலி தவிர்க்க வழி காண்போம்!

மூட்டு வலிகள்
மூட்டு வலிகள்

உடல் இயக்கத்துக்கு அடிப்படையான மூட்டுகளின் நலம் நாடவும், மூட்டு சார்ந்த நோய்களை தவிர்க்கவும், விழிப்புணர்வு பெறும் வகையில், உலக மூட்டு நோய் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 12ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இரண்டு அல்லது அதற்கு அதிகமான எலும்புகளின் சந்திப்பு, மூட்டு என்பதாக உடலின் பல்வேறு பாகங்களில் அமைந்திருக்கிறது. இந்த மூட்டுகளின் இயல்பான இயக்கம் என்பது, மூட்டு எலும்புகளின் ஆரோக்கியம் மட்டுமன்றி, அவற்றுக்கு இடையிலான சவ்வுகள் மற்றும் அவற்றை சூழ்ந்த தசைகளின் வலிமை ஆகியவற்றையும் சார்ந்தது இருக்கும்.

மூட்டுகளில் ஏற்படும் வலியானது ஒருவரின் இருப்பு மற்றும் இயக்கத்தை முடக்க காரணமாகிவிடும். வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடியது என்பதற்கு அப்பால், வாழ்க்கை நடைமுறைகள், உணவு, பணிச்சூழல் காரணமாக வயதில் இளையோருக்கும் தற்காலத்தில் மூட்டு வலி அதிகரித்து வருகிறது.

மூட்டு வலிகள் பலவிதம்
மூட்டு வலிகள் பலவிதம்

மூட்டு தேய்மானம், மூட்டு வலி, கீல்வாதம், முடக்குவாதம் என மூட்டு சார்ந்த நோய்களும், வலிகளும் பலவாறாக இருப்பினும், அவற்றை தவிர்ப்பதற்கான வழியை இளம்வயது முதலே அடையாளம் காண்பது நல்லது. போதிய உடற்பயிற்சி, மத்திம மற்றும் முதிய வயதில் எட்டிப்பார்க்கும் மூட்டு பாதிப்புகளை தவிர்க்க உதவும். தசைகள் வலிமை அடைவது, மூட்டுகளின் நீடித்த இயக்கத்துக்கு உதவும். அன்றாட நடைப்பயிற்சி மற்றும் இதர உடற்பயிற்சிகளுக்கு அப்பால், யோகாவும் மூட்டுகளின் நெகிழ்வு மற்றும் ஆரோக்கியத்துக்கு உதவும்.

கால்சியம் சத்துள்ள உணவுகளை அன்றாடம் எடுத்துக்கொள்வது அவசியம். குறிப்பாக பெண்கள், வயது முதிர்ந்தோர், மரபுவழியில் மூட்டு நோய் அபாயமுள்ளவர்களுக்கு உணவூட்டத்தில் கூடுதல் அக்கறை தேவை. உணவுக்கு அடுத்தபடியாக ஓய்வும், உறக்கமும் மூட்டு பாதிப்புகளை குறைக்க உதவும்.

வரம்பற்ற கடுமையான உடல் உழைப்பு மட்டுமன்றி, கணினி முன்பாக நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, விசைப்பலகையில் அதிகம் விரல்களை உபயோகிப்பது, பணி நிமித்தம் ஒரே இடத்தில் நாள் நெடுக முடங்கி கிடப்பது ஆகியவையும் கழுத்து, கை, இடுப்பு எனத் தொடங்கி பல்வேறு மூட்டுகளில் நாள்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே மூட்டுகளை அதிகம் பயன்படுத்த நேரிடுவோர், அவற்றின் இயக்கத்துக்கு உரிய இடைவெளியும், ஓய்வும் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

ஆர்த்ரைடிஸ் விழிப்புணர்வு நாள்
ஆர்த்ரைடிஸ் விழிப்புணர்வு நாள்

உறக்கம், மூட்டுகளுக்கு போதிய ஓய்வினையும், கூடுதல் ஆயுளையும் வழங்குகிறது. உறக்கம் கெடுவோருக்கு மூட்டு பாதிப்புகள் இளம் வயதிலேயே எழக் காரணமாகின்றன. புகை மற்றும் மது பழக்கமும் மூட்டுகளை பாதிக்கச் செய்யும். நீடித்த மூட்டு வலி கண்டவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. மூட்டுவலியை உருவாக்கும் உடற்பாதிப்புக்கும், சிறுநீரகத்தின் இயக்கம் பாதிப்பதற்கும், சிலருக்கு நேரடி தொடர்பு அமையக்கூடும் என்பதாலும் இந்த மருத்துவ ஆலோசனை அவசியமாகிறது.

அதேபோன்று, மூட்டுவலி நிவாரணம் என்ற பெயரில் தாமாக வீரிய வலி நிவாரணிகளை உட்கொள்வது, கூடுதல் உடல் உபாதைகளை வரவேற்கும். பிசியோதெரபி உள்ளிட்ட மருந்தற்ற வலி நீக்கும் உபாயங்களை மருத்துவ ஆலோசனையின் பேரில் பெறலாம்.

மூட்டு வலி சார்ந்த உடல் உபாதைகளை தவிர்க்கவும், அவதி கண்டவர்கள் அவற்றிலிருந்து விடுதலை பெறவும் உலக மூட்டு நோய் தினத்தில் விழிப்புணர்வு பெறுவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in