`உன் வீட்டில் நான் தான் திருடினேன்'- மதுபோதையில் உளறியவரை கொடூரமாக கொன்ற உறவினர்

கொலை
கொலை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாயமான தொழிலாளி எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளார். அவரது நண்பர்களே அவரை மதுபோதையில் கொலை செய்து சடலத்தை தூக்கி வீசி சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், சுரப்பன்பரப்பைச் சேர்ந்தவர் மாசாணம் என்ற கண்ணன்(32) கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். மாசாணம் என்ற கண்ணன் கடந்த 18-ம் தேதி திடீரென மாயமானார். அதன்பின்னர் அவர் என்ன ஆனார் என்ற விவரம் தெரியவில்லை. தன் கணவர் மாயமானது குறித்து இசக்கியம்மாள் கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அதில், மாசாணம் என்ற கண்ணனை கடைசியாக பாலன் என்ற பாலகிருஷ்ணன்(34), விக்னேஷ்(19) என அதே ஊரைச் சேர்ந்த இருவர்தான் அழைத்துச் சென்றதாகவும் புகார் கொடுத்திருந்தார். அதன் பேரில் போலீஸார் இவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்த போது, பல அதிரவைக்கும் தகவல்கள் கிடைத்தன, அதில் மாசாணம், பாலகிருஷ்ணன், விக்னேஷ் மூவரும் கடந்த 18-ம் தேதி ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது பாலகிருஷ்ணனுக்கும், மாசாணத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் பாலகிருஷ்ணனும், விக்னேஷும் சேர்ந்து கல்லால் தாக்கியே மாசாணத்தைக் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து மாசாணத்தின் உடலையும் ஊட்டுவாழ்மடம் பகுதியில் தூக்கி வீசிவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் அடிப்படையில் கன்னியாகுமரி போலீஸார், ஊட்டுவாழ்மடம் பகுதியில் சோதனை செய்துபார்த்தபோது மாசாணம் என்ற கண்ணன் எலும்புக்கூடாகக் கிடந்தார். இதில் பாலகிருஷ்ணன், கொல்லப்பட்ட மாசாணத்தின் நெருங்கிய உறவினர் ஆவார். பாலகிருஷ்ணன் வீட்டில் அடிக்கடி சின்ன, சின்னப் பொருள்கள் திருடுபோனது. அதை மாசாணம் தான் திருடியதாக மது போதையில் உளறியதாகவும் அதனால் ஏற்பட்ட மோதலிலேயே இந்தக் கொலை நடந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in