இடதுகாலை மிதித்து உடைத்தது காட்டு யானை: நடைப்பயிற்சிக்கு சென்ற தொழிலாளிக்கு நடந்த துயரம்!

 யானை
யானை

வால்பாறையில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த தொழிலாளி யானை மிதித்து படுகாயம் அடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் நடைப்பயிற்சி செய்வோரை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அருகில் உள்ள சோலையாறு 2-வது டிவிசனைச் சேர்ந்தவர் துரைராஜ்(59). இவர் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக உள்ளார். இவர் இன்று காலையில் தனது எஸ்டேட்டில் இருந்து நல்லகாத்து சுங்கம் பாலம் வழியாக நடைப்பயிற்சி செய்துகொண்டு இருந்தார். இவர் வழக்கமாக இங்குதான் நடைப்பயிற்சி செல்வார். இவர் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தபோது காட்டில் இருந்து வந்த ஒற்றை யானை ஒன்று, துரைராஜைத் துரத்தத் தொடங்கியது. அதற்குப் பயந்து துரைராஜ் ஓடினார்.

அப்போது அவர் கால் இடறி கீழே விழுந்தார். அப்போது அவரை காட்டு யானை பலமாக மிதித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதிவாசிகள் வந்து சத்தம் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு காட்டு யானை ஓடிவிட்டது. யானை மிதித்ததில் துரைராஜின் இடதுகால் முறிந்தது. வலது காலிலும் பலத்தக் காயம் ஏற்பட்டது. வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட துரைராஜ், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வால்பாறை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in