முடிவுக்கு வருகிறதா 
‘வீட்டிலிருந்தே வேலை’ கலாச்சாரம்?

முடிவுக்கு வருகிறதா ‘வீட்டிலிருந்தே வேலை’ கலாச்சாரம்?

‘கோவிட் 19‘ என்ற புதிய பெருந்தொற்று ஏற்பட்டபோது, உலகமே அஞ்சியது. வெளியில் போய்த்தான் வேலை பார்த்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்த களப்பணியாளர்கள், வேலையையும் வருமானத்தையும் இழந்தார்கள். அலுவலக வேலையை வீட்டுக்குக் கொண்டுவந்து செய்யக்கூடிய நிலையில் இருந்தவர்கள் சமாளித்தார்கள். மடிக் கணினி, மேஜை கணினி வைத்திருந்தவர்கள் வேலையைத் தொடர்ந்தார்கள். தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கணக்குப் பதிவேடுகளைப் பராமரிக்கும் ஊழியர்களுக்கும் பெருந்தொற்றுக்கும் முன்னதாகவே, வீட்டிலிருந்து வேலை என்பது ஓரளவுக்கு அறிமுகமாகியிருந்தது. அதில் அதிகாரிகள், குழுத் தலைவர்கள் நிலையில் இருந்தவர்கள் வீட்டிலிருந்தபடியே மற்றவர்களைக் கண்காணிப்பது, ஆலோசனைகளைக் கூறுவது, திடீர் மாற்றங்களுக்கேற்ப நிரல்களை மாற்றுவது போன்றவற்றுக்கு இதைப் பயன்படுத்தினார்கள்.

ஆனால் யாருமே இதை அமைப்பு ரீதியாகச் செய்வது குறித்தோ, அலுவலகம் முழுவதும் செய்வது பற்றியோ யோசிக்கவில்லை.

இப்போது பெருந்தொற்று பற்றிய அச்சம் குறைந்து வருகிறது. பொருளாதாரத்தை முழுவேகத்தில் வளர்க்க அனைவரும் அலுவலகம் வருவதே நல்லது என்று பல தலைமை நிர்வாகிகள் நினைக்கின்றனர்.

புதிய வகைப் பணிச் சூழல்

சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரலாறு காணாத மழை – வெள்ளம் ஏற்பட்டபோது, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. அப்போது இந்த முறை ஓரளவுக்குக் கைகொடுத்தது. அயல்பணி ஒப்படைப்புத் துறைகளில் பணியாற்றியவர்களும் கால் சென்டர் என்றழைக்கப்படும் தகவல் – ஆலோசனை – உதவிப் பிரிவுகளில் பணிபுரிகிறவர்களும் மேய்ப்பர்கள் இல்லாமலேயே தங்களுடைய வேலைகளைச் செய்யும் திறமைகளை வளர்த்துக்கொண்டனர். இதனால் அலுவலகம் என்ற 4 சுவர்களுக்குள், அதிகாரிகளின் கண்காணிப்பின்கீழ்தான் வேலைகளைச் செய்ய முடியும் என்ற நிலை மாறியிருந்தது. பெருந்தொற்றுக் காலத்தில் பொதுப் போக்குவரத்தும் தனிப் போக்குவரத்தும் முடங்கியதால், வேறு வழியில்லாமலும் ஏராளமானோர் வீட்டிலிருந்தே வேலை முறைக்கு மாறினார்கள்.

ஆரம்பத்தில் பலரிடம் போதிய சாதனங்கள் இல்லை. வீடுகளில் தனியறைகளோ, வசதியான இடங்களோகூட இல்லாமல் திண்டாடியவர்களும் அதிகம். கணினிகளை வசதியாக வைத்துக்கொள்ள அறைகலன்கள்கூட பெரும்பாலான வீடுகளில் இல்லை. அனைவரையும் இன்றளவும் பாடாய்ப்படுத்துவது இணையவழித் தொடர்புக்கான இணைப்புகள். பல நல்ல நிறுவனங்கள் ஊழியர்களின் நிலை அறிந்து மோடம், கேபிள் இணைப்பு போன்றவற்றுக்கான செலவுகளை ஏற்று வீட்டிலிருந்தே நிம்மதியாக வேலை செய்ய ஊக்குவித்தன. இப்படி புதிய வகை பணிக் கலாச்சாரம் உருவாகி பரவலாகியும்விட்டது.

இப்போது பெருந்தொற்று பற்றிய அச்சம் குறைந்து வருகிறது. பொருளாதாரத்தை முழுவேகத்தில் வளர்க்க அனைவரும் அலுவலகம் வருவதே நல்லது என்று பல தலைமை நிர்வாகிகள் நினைக்கின்றனர். ஒரு நெருக்கடியைச் சமாளிக்க செய்த ஏற்பாட்டை, நெருக்கடி நீங்கும் நிலையிலும் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர். போர்க்கால ஏற்பாடுகளை சமாதான காலத்திலும் தொடர்வது கெடுதலையே ஏற்படுத்தும் எனும் கருத்தை அவர்கள் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அலுவலகச் சூழலுக்கு ஏங்குபவர்கள்

‘வீட்டிலிருந்து வேலை இனி தேவையில்லை அலுவலகம் வாருங்கள்‘ என்று நிர்வாகம் எப்போது அழைக்கும் என்று திருமணமாகாதவர்களும், இளவயதுக்காரர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். முதல் காரணம், உடன் பணிபுரிவோரைச் சந்திக்காமல் செய்யும் வேலை திருப்தியளிப்பதில்லை. சகாக்களுடன் சிரித்துப் பேசி, சில சமயம் சண்டைபோட்டு பேசுவதால் கிடைக்கும் அலாதி இன்பம் வீட்டிலிருந்து செய்யும்போது கிடைப்பதில்லை. ஒரு வேலையை எப்படிச் செய்ய வேண்டும் (அல்லது செய்யக் கூடாது) என்று தன் வயது அல்லது அந்தஸ்துக்கு ஈடானவர்களிடம் கேட்டு செய்யும்போது வேலை எளிதாகிவிடும். சில வேளைகளில் ஆலோசனைகளோ, விவாதங்களோ அந்த வேலையை மேலும் மெருகூட்ட உதவும். செல்பேசிகளில் பேசிக்கொள்ளலாம் என்றாலும் நேரில் பேசுவதைப்போலத் தெளிவாகவும் விரிவாகவும் பேச முடிவதில்லை. உடல் மொழியோடு ஒரு கருத்தைக் கேட்பதுபோல அல்ல - குரல் மொழியை மட்டுமே கேட்பது. வீட்டிலிருந்தே வேலை என்பதில் உள்ள ஒரே அனுகூலம், மேலதிகாரியை நேருக்கு நேர் அதிகம் பார்க்க வேண்டிய அவசியமில்லை (அலுவலகத்தில் கடன் கொடுத்தவர்களையும்தான்!). ஆனால் நேற்று செய்த வேலை, இன்று செய்யும் வேலை, நாளை செய்ய வேண்டிய வேலையைப் பற்றி எழும் விமர்சனங்கள், ஆலோசனைகள், முன்திட்ட தயாரிப்புகளை முழு விவரங்களோடு செய்ய முடியாமல் போவதும் உண்டு.

இப்போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு வந்தவுடனேயே வரிசையாக என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லும் வழக்கத்தை மேலதிகாரிகள் பழகிவிட்டார்கள். இதனால் வெட்டிப்பேச்சு குறைந்துவருகிறது. அதேவேளையில் பதிலுக்கு விளக்கம் கேட்க கூச்சப்பட்டு அல்லது அஞ்சி பிற சகாக்களைக் கேட்டு கேட்டு செய்வதும் பலரிடம் வழக்கமாக இருக்கிறது.

நியாயமான அச்சம்

மறுபுறம் மீண்டும் அலுவலகத்துக்கே வந்து வேலை என்றால், வேலையை விட்டுவிடலாம் என்ற மனநிலைக்கும் சிலர் வந்துவிட்டனர். காரணம் அவர்கள் இந்த வேலையுடன் குடும்பத் தொழில் அல்லது தெரிந்த தொழிலையும் சேர்த்துச் செய்துவருகின்றனர். சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் வெளியூரில் அதிகச் சம்பளத்துக்கு வேலைசெய்தாலும் அதில் உள்ள அலைச்சல்கள், உடல் உபாதைகளைக் கணக்குப்போட்டு வீட்டு வேலையே போதும் என்று நினைக்கிறார்கள். மிகச் சில சாமர்த்தியக்காரர்கள் ஒரேவிதமான வேலையை இருவேறு நிறுவனங்களுக்குச் செய்து கொடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டுள்ளனர். நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வேலைசெய்தார்கள் என்றால், வசதி படைத்தவர்கள் இதுவரை போயே இருக்காத மலைவாசஸ்தலங்கள், கிராமப்புறங்களுக்கு கேரவான் போல தங்களுடைய வாகனத்தையே வடிவமைத்து அதில் தங்கியிருந்து வேலை செய்தார்கள்.

இன்னொரு புறம், மீண்டும் அலுலவகம் சென்று வேலைபார்க்க பலர் அச்சப்படுகின்றனர். கோவிட் 3-வது அலை வரும் , பூஸ்டர் ஊசி அவசியம், டெல்டா வைரஸ் உருமாறி வருகிறது என்றெல்லாம் கூறப்படும் நிலையில், அலுவலகம் போய் அங்கிருந்து கண்ணுக்குத் தெரியாத வைரஸ் தொற்றிக்கொண்டு, அதை வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகளுக்கும் பரப்பிவிட நேர்ந்தால் என்னாவது என்று கவலைப்படுகிறார்கள். இது நியாயமான அச்சமே. நிர்வாகங்கள் இதற்கு செவி கொடுப்பது அவசியம்.

வீடு என்றால் கைலி, வேட்டி, பைஜாமா, பெர்முடாஸ் அல்லது நீளமான அன்டர்வேர் கூட போதும். பல் தேய்ப்பது, காபி குடிப்பது போன்ற அத்தியாவசியங்களைச் செய்துவிட்டு, சாப்பிட்டுக்கொண்டே வேலைபார்ப்பது சுகமாக இருக்கிறது.

மீண்டும் அலுவலகத்துக்கே சென்று வேலை செய்வதைப் பலர் விரும்பாததற்கு முதல் காரணம், காலையில் இதற்காக சீக்கிரம் எழுந்து, குளித்து, உடைமாற்றி சொந்த வாகனத்திலோ அல்லது பிற வாகனத்திலோ அடித்துப் பிடித்து ஓட வேண்டியிருக்கிறது என்பதுதான். வீடு என்றால் கைலி, வேட்டி, பைஜாமா, பெர்முடாஸ் அல்லது நீளமான அன்டர்வேர் கூட போதும். பல் தேய்ப்பது, காபி குடிப்பது போன்ற அத்தியாவசியங்களைச் செய்துவிட்டு, சாப்பிட்டுக்கொண்டே வேலைபார்ப்பது சுகமாக இருக்கிறது. வேலைக்கே போவதற்கு பெரு நகரங்களில் உள்ளவர்களுக்கு நிறைய நேரம், பணச்செலவு ஆவதுடன் காலை சிற்றுண்டி, மதியச் சாப்பாடு போன்றவற்றைத் திட்டமிட்டுக்கொள்ள முடியாமல் பெரும்பாலான நேரங்கள் பணத்தையும் கொடுத்துவிட்டு வயிறையும் கெடுத்துக்கொள்ள நேர்கிறது. வீட்டிலிருந்து வேலை போக்குவரத்து, டிபன் – காபி செலவைக் குறைப்பதுடன் உடல் நலத்தையும் பேணுகிறது. நிறையப் பேருக்கு குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவிடுவது பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. ஓரளவுக்கு குடும்ப உறுப்பினர்களும் வேலை செய்கிறார்கள் – தொல்லை தரக்கூடாது என்ற புரிதலுடன் நகர்ந்துவிடுகிறார்கள். இனி கோயில், திரையரங்கம், மால்கள் என்று எல்லாவற்றையும் திறந்துவிட்டு வீட்டிலிருந்து வேலை என்றால், இவற்றில் ஏதாவது ஒன்றுக்குப்போய்விட்டு வந்து வேலை பார்க்கலாம் என்று முன்பைவிட அலைச்சல் அதிகமாவதும் நடக்கும்.

ஊழியர்கள் யாரும் வேலைக்கு வருவதில்லை என்பதால், நிறுவனங்களுக்கு நிர்வாகச் செலவு கணிசமாகக் குறைந்துவிட்டது. வாகனங்கள், கேன்டீன் செலவு, அலுவலகத்தில் தண்ணீர் கேன், காபி – டீ க்கான ஏற்பாடுகள் எல்லாம் மிச்சம். அத்துடன் ஏசி, ஃபேன் பயன்பாடு குறைந்ததால் மின்கட்டணச் செலவும் குறைந்துவிட்டது. அதே சமயம் வீடுகளுக்கு இந்தச் செலவு கூடிவிட்டது. வீட்டிலிருந்தே வேலை என்பது இல்லத்தரசிகளுக்கே உரியதாக இருந்தது. ஆனால், அவர்கள்தான் இந்த பெருந்தொற்றுக் காலத்தில் அதிக உடல் அசதி, மன உளைச்சல், சோர்வு ஆகியவற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். வீட்டிலேயே இருந்து வேலை பார்ப்பதால், வாய்க்கு ருசியாகச் சமைத்துப் போட அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஒவ்வொரு வீட்டுச் சரித்திரத்திலும் தனி அத்தியாயமாக எழுதப்பட வேண்டும். ‘எதிலேயும் பெண்கள் சுகம் காண்பதில்லை‘ என்ற திரைப்படப் பாடல் வரிகள் பெருந்தொற்றுக்காலத்தில் ஏழை, பணக்காரர், நடுத்தர வர்க்கம் என்று அனைத்துத் தரப்புக்குமே பொருந்தும். பெண்களின் சுமைகளைக் குறைக்க மத்திய, மாநில மகளிர் – குழந்தைகள் நலத் துறை புதிய திட்டங்களை கண்டிப்பாக அறிவிக்க வேண்டும்.

மாறிப்போன பார்வைகள்

தன்னுடைய வீட்டுப் பிள்ளை அல்லது கணவர் அல்லது தந்தை என்ன வேலை செய்கிறார் என்பதை வீட்டில் உள்ளவர்களும் அறிய இப்போது வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சில வீடுகளில் அனுதாபப்படுகின்றனர், பெருமைப்படுகின்றனர். சிலர், இந்த வேலைக்கா இவ்வளவு பந்தா என்று பலூனில் ஊசி குத்தி வெடிக்க வைக்கின்றனர். வீட்டிலிருந்தே வேலை என்பது பாரம்பரியத் தொழிலுக்குத்தான் ஏற்றது என்ற கருத்து மாறி வருகிறது. இப்போது மாநில அரசும் தன்னுடைய அனைத்துத் துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதில் தீவிரம் காட்டுகிறது. எதிர்காலத்தில் மத்திய, மாநில அரசுப் பணிகளில் பெரும்பாலானவை வீடுகளிலிருந்தே செய்யப்பட்டாலும் வியப்பதற்கு ஏதுமில்லை.

சென்னை, பெங்களூரு, கோவை, ஹைதராபாத், டெல்லி, மும்பை, புணே என்று பெரு நகரங்களில் மையம் கொண்டிருந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது 2-வது நிலை நகரங்கள், 3-வது நிலை நகரங்களுக்கும் பரவிக்கொண்டிருக்கின்றன. மதுரை, திருநெல்வேலிக்கெல்லாம் ஐ.டி. வருமா என்று கேட்டவர்கள், குக்கிராமங்களிலிருந்தே பலர் மடிக்கணினியுடன் வேலை செய்யும்போது மையங்களை தங்கள் ஊர்களிலும் இனி நிறுவுவார்கள் என்று தன்னம்பிக்கை பெற்றுள்ளனர். பாரத் நெட் போன்ற இணையவழித் தொடர்புக்கு மக்கள் ஆதரவு தருவார்களா என்ற கேள்வி மாறி, எப்போது எங்கள் ஊருக்கு இணைய வசதி கிடைக்கும் என்று மக்களே கேட்கத் தொடங்கிவிட்டனர். ரயில் பாதை நெடுகிலும் உள்ள ரயில்நெட் இணைய இணைப்பின் வேகம் தனியார் நிறுவனங்களுக்கே சவால்விடும் வகையில் விரைவாக இருப்பதை அனுபவிப்பவர்கள் அநேகம். இவையெல்லாம் வீட்டிலிருந்தே வேலை கால நன்மைகள்.

அதே சமயம் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கேப் கார் போன்ற துறைக்காரர்களுக்கு வருவாய் குறைந்து பெரிய சோதனையாகிவிட்டது. இப்போதும் கூட அவர்களால் முழுமையாக மீட்சிபெற முடியவில்லை. வீட்டுக்கே கொண்டுவந்து சாப்பாடு, தின்பண்டங்களை விற்கும் நிறுவனங்களுக்கு வியாபாரம் அதிகரித்துள்ளது. அதே சமயம் சிறு, நடுத்தர ஹோட்டல்காரர்கள் ஒன்றரை ஆண்டுக்கால வருவாய் இழப்பைச் சரிக்கட்ட எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ என்று கலங்குகிறார்கள். சமையல் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், நிகழ்த்துக்கலைக் கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள் ஆகியோரின் நிலையும் பரிதாபம்தான். இவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்ய முடியாதவர்கள்.

பிஎச்கேவுடன் இனி ஓஆரும் இருக்கும்

முன்பெல்லாம் அடுக்ககங்களை வாங்குவோர் 2 பிஎச்கே, 3 பிஎச்கே என்று பெட்ரூம்-ஹால்-கிச்சன் என்று கேட்டார்கள். இனி ஆஃபிஸ் ரூம் (ஓஆர்) இந்த வரிசையில் சேர்ந்துவிடும். வீடுகளில் இனி மும்முனை இணைப்பு, இன்வெர்ட்டர் வசதியுடன், சுழலும் சக்கர நாற்காலி, பெரிய மேஜை, மோடம், இன்டெர்நெட் கேபிள் வசதி ஆகியவையும் மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ், ஏசி போல நிரந்தர உறுப்புகளாகிவிடும். இப்போதே டேப்லெட், மடிக்கணினி, டெஸ்க் டாப் கணினிகளுக்கு வரவேற்பு அதிகமாகிவிட்டது. இனி பைக், செல்போன் போல ஏதாவதொரு வகைக் கணினியும் அவசியம் என்றாகிவிடும். கணினியும் இணையவழித் தொடர்புகளும் - படித்த மேல்தட்டு வர்க்கத்துக்கே தெரியும் என்ற நிலை மாறிக்கொண்டிருக்கிறது. விவசாயம், சிறு தொழில்கள், சிறு வணிகம், விருந்தோம்பல் துறை ஆகியவற்றுக்கும் கணினிகள் முக்கியமாகி வருகின்றன. இணையவழிக் கல்வி ஏழைகளுக்கு, குறிப்பாக அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிக்கூட மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்தது. தனியார் பள்ளிக்கூடங்களில் அதுவும் கான்வென்டுகளில் இந்தப் பிரச்சினை இல்லை என்றாலும், இப்போது வாரத்தில் 2 நாட்களாவது வீட்டிலிருந்தே படிக்க அனுமதிப்பது பற்றி பள்ளிக்கூட நிர்வாகங்கள் யோசித்து வருகின்றன.

சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் கண்ட காட்சி, கோவிட் 19 எப்படி உலகைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது என்பதை உணர்த்தியது. 7 அல்லது 8 வயது இருக்கும் மகனிடம் அந்தத் தாய் தனது ஆண்ட்ராய்ட் போனைக் கொடுத்து, ‘இதைப் பாருடா, பாருடா’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். அவனோ அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பார்ப்பதில் கவனமாக இருந்தான். அந்த அம்மாள் சொன்னார், “முன்பெல்லாம் போனைக் கீழ வைக்க பயமா இருக்கும், உடனே எடுத்து நோண்ட ஆரம்பிச்சுடுவான், இப்ப ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிச்சதிலிருந்து செல்போன் பக்கமே வரமாட்டேங்கிறான்” என்றார். மருத்துவமனையே சிரிப்பில் அதிர்ந்தது!

Related Stories

No stories found.