குமரி மாவட்டத்தில் களமிறங்கியது பெண்கள் அதிவிரைவுப்படை: தமிழகத்தில் முதலாவதாக உருவாக்கம்

குமரி மாவட்டத்தில் களமிறங்கியது பெண்கள் அதிவிரைவுப்படை: தமிழகத்தில் முதலாவதாக உருவாக்கம்

தமிழகத்திலேயே முதன் முறையாக பெண் காவலர்களை உள்ளடக்கிய பெண்கள் அதிவிரைவுப்படையினை கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றுமுதல் இந்த பெண்காவல் விரைவுப்படைத் தன் முழுநேர பணியைத் தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.பியாக பொறுப்பேற்ற ஹரிகிரன் பிரசாத் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்து வருகிறார். இவரது மகனை கோட்டாறில் உள்ள கவிமணி அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்துள்ளார். இதுபோன்ற செயல்பாடுகளினால் மக்கள் மத்தியிலும் இவரது செயல்பாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் பெண்களைக் குற்றச் சம்பவங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகத்திலேயே முதலாவதாக பெண்கள் அதிவிரைவுப்படையை தொடங்கியுள்ளார் எஸ்.பி ஹரிகிரன் பிரசாத். எஸ்.பியின் நேரடிப் பார்வையில் இயங்கும் இந்த பெண்கள் அதிவிரைவுப்படையானது, பெண்கள் அதிகமாகக் கூடும் கோயில்கள், கல்லூரி தொடங்கும், விடும் நேரம், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். இந்தக் குழுவில் ஒரு பெண் சார்பு ஆய்வாளர், பத்து பெண் காவலர்கள் உள்ளனர். இவர்களுக்குத் தனியாக வாகனம், பாடிகார்டு, ஷீல்டு ஆகியவையும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்தப் பெண் காவலர்கள் படையானது, ஆர்ப்பாட்டம், போராட்டங்களின் போது பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது, ஈவ் டீசிங் தொடர்பான புகார்களுக்கு உடனே களத்திற்குச் சென்று துரித நடவடிக்கை எடுப்பது, செயின் பறிப்பு உள்ளிட்டவைத் தொடர்பான புகார்களுக்கு நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளது. தமிழகத்திலேயே பெண் காவலர்களுக்காக அதிவிரைவுப்படை உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in