`நம்பிச் சென்றேன், ஆசைக்காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டனர்'- பெண்களால் ஏமாற்றப்பட்ட தனியார் ஊழியர்

`நம்பிச் சென்றேன், ஆசைக்காட்டி லட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டனர்'- பெண்களால் ஏமாற்றப்பட்ட தனியார் ஊழியர்

லோன் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது பாதிக்கப்பட்டவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வினோத்குமார்(40). இவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் ஒன்றை அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வினோத்குமார், "தான் பணிபுரிந்த அலுவலகத்தில் மேலாளராக இருந்த நபர் மூலம் ஆலந்தூரை சேர்ந்த சோனியா என்ற பெண்ணின் தொடர்பு கிடைத்தது. பின்னர் தனக்கு கடன் தேவை என்பதை அறிந்து கொண்ட சோனியா, வங்கியில் லோன் வாங்கித் தருவதாக தெரிவித்தார். அதனை நம்பி தன் பெயரில் உள்ள ஆவணங்கள் சிலவற்றை சோனியாவின் முகவரிக்கு மாற்றினேன். அதன்பின் இந்த ஆவணங்களை வைத்து வில்லிவாக்கத்தில் உள்ள சங்கீதா என்ற தனியார் ஷோரூமிற்கு அழைத்துச் சென்றார். அவருடன் பரத் மற்றும் ரேகா ஆகியோர் உடன் வந்தனர். இந்த மூவரும் ஷோரூமில் உள்ள மேலாளரிடம் தனியாக பேசி பொருட்களை கடனாக வாங்குவது போன்று பல வங்கி ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர்.

தன்னுடைய பெயரில் விலை உயர்ந்த 2 ஐபோன்கள் வாங்கியதுபோல் ஆவணங்கள் தயாரித்து அந்த ஐபோன்களுடன் புகைப்படம் எடுத்தனர். மொத்தமாக 1.36 லட்ச ரூபாய்க்கு இரண்டு ஐபோன்களை வாங்கியதாக ஆவணங்கள் தயார் செய்தனர். இரண்டு நாட்களில் இந்த பணத்தை கொடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் நாட்கள் பல ஆகியும் பணம் வராததால் சந்தேகமடைந்து இது குறித்து விசாரித்து கொண்டிருந்தபோது முதல் மாத இஎம்ஐ செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே சோனியாவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரை தொடர்புகொள்ள முடியலவில்லை.

மேலும் சம்பந்தப்பட்ட தனியார் ஷோரூமுக்கு சென்று கடன் தொகை வரவில்லை. ரொக்க தொகையோ அல்லது என் பெயரில் கடனாக வாங்கிய ஐபோன்களை கொடுக்குமாறு கேட்டதற்கு அங்கிருந்த ஷோரூம் ஊழியர்கள் தன்னுடன் வந்த பரத் என்பவர் ஐபோன்களை வாங்கிச் சென்று விட்டதாக கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் பெயரில் வாங்கிய பொருட்களை அவர்களுக்கு எவ்வாறு கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு, தனக்கு பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் பரிசு கொடுப்பதற்கு பரத் வாங்கிச் சென்றதாக தெரிவித்ததாக கூறினர். இதன் பின்பு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது தொடர்பாக புகார் அளிக்க செல்லும் போது தன்னைப் போன்று பலர் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. கடன் வாங்கித் தருவதாக சொல்லி தன்னை கடனாளி ஆக்கி ஏமாற்றிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த மோசடி கும்பல் 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் இதேபோன்று சென்னையில் உள்ள தனியார் ஷோரூக்கு அழைத்துச் சென்று பொருட்கள் மீது கடன் வாங்கி அதை பணமாக கொடுப்பதாக கூறி மோசடி செய்து வருகின்றனர். இந்த மோசடியில் தனியார் ஷோரூமை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. சோனியாவிடம் பணத்தை கேட்கும் போது போலீஸ் என கூறி இருவர் மிரட்டுகின்றனர்" என்றார்.

ஏற்கெனவே மைலாப்பூரில் இதுபோன்ற தனியார் ஷோரூம்களில் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தி பொருட்கள் மீது கடன் வாங்கி மோசடிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in