
தைல மரத் தோப்பில் தனிமையில் இருந்த போது ஆண் நண்பரை விரட்டி அடித்துவிட்டு, இளைஞர்கள் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர், கணவரைப் பிரிந்து தனது மூன்று மகள்களுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, நட்பாகப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரக்காணம் பகுதியில் உள்ள தைல மரத் தோப்பில் தனிமையில் அவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். இதை அதே பகுதியைச் சேர்ந்த எழில், பரதன் மற்றும் அவர்களின் நண்பர்கள் என நான்கு பேர் நோட்டமிட்டுள்ளார்கள். இதையடுத்து அவர்கள் திடீரென அப்பகுதியில் நுழைந்து அந்த ஜோடியை மிரட்டியுள்ளனர்.
மேலும் அந்த பெண்ணின் ஆண் நண்பரை அடித்து விரட்டியிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணை நால்வரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த வீடியோவை காட்டி, அவரை தொடர்ந்து அந்த இடத்திற்கு வரவழைத்து பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். மேலும் இது தொடர்பாக கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள கோட்டகுப்பம் போலீஸார், இதில் தொடர்புடையவர்களை தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.