மகளிர் ஆணையத் தலைவருக்குப் பாலியல் மிரட்டல்: பிக் பாஸில் சாஜித் கான் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்தவர்!

டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால்
டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால்

பாலியல் புகாரில் சிக்கிய பாலிவுட் இயக்குநர் சாஜித் கானை பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் எனக் கூறியதையடுத்து, இன்ஸ்டாகிராமில் தனக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாக டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியிருக்கிறார்.

‘மீ டூ’ இயக்கத்தின்போது, பாலிவுட் இயக்குநரும் காமெடியனுமான சாஜித் கான் மீது, பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்நிலையில், இந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் (சீஸன்-16) நிகழ்ச்சியில் அவர் ஒரு போட்டியாளராகப் பங்கேற்றிருக்கிறார்.

பாலியல் புகார்களுக்கு ஆளானவர் எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்குக் கடிதம் எழுதிய ஸ்வாதி மாலிவால், ‘சாஜித் கான் மீதான புகார்கள் மிகவும் தீவிரமானவை. விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும். பாலியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டிருப்பவர்கள் எந்தச் சூழலிலும் தேசியத் தொலைக்காட்சியிலும் ஓடிடி தளங்களிலும் பங்கேற்க அனுமதிக்கப்படக் கூடாது’ என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த விவகாரம் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இன்ஸ்டாகிராமில் தனக்குப் பாலியல் மிரட்டல்கள் வருவதாக ஸ்வாதி மாலிவால் இன்று கூறியிருக்கிறார். தனக்கு வந்த மிரட்டலை ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்து ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் அவர், ’அவர்கள் எங்களை வேலை செய்யவிடாமல் தடுக்க நினைக்கிறார்கள். இதுகுறித்து டெல்லி போலீஸில் புகார் தெரிவிக்கிறேன். அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரணை நடத்துங்கள். இதன் பின்னணியில் இருப்பவர்களைக் கைதுசெய்யுங்கள்’ என்று அவர் அதில் கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in