'பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் அழகாக இருக்கிறார்கள்' - பாபா ராம்தேவின் சர்ச்சை பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

'பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் அழகாக இருக்கிறார்கள்' - பாபா ராம்தேவின் சர்ச்சை பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

பெண்கள் புடவையிலும், சல்வார் உடையிலும், எதுவும் அணியாத போதும் அழகாக இருப்பார்கள் என்று பாபா ராம்தேவ் கூறிய கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் நடந்த யோகா முகாமில் பேசிய பாபா ராம்தேவ், பெண்கள் புடவையிலும், சல்வார் உடையிலும், ஒன்றும் அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என்று கூறியது புதிய சர்ச்சையின் மையமாக உள்ளது. இந்த யோகா முகாமில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ்சும் கலந்து கொண்டார். ராம்தேவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும், எம்.பியுமான ஸ்ரீகாந்த் ஷிண்டேவும் கலந்து கொண்டார்.

ராம்தேவின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால், ராம்தேவ் பேசிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுவாதி மாலிவால் ட்வீட் செய்துள்ளார். அவர், "மகாராஷ்டிர துணை முதல்வரின் மனைவி முன்னிலையில் பெண்கள் குறித்து சுவாமி ராம்தேவ் கூறியது அநாகரீகமானது, கண்டனத்துக்குரியது. இந்த அறிக்கையால் அனைத்து பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாபா ராம்தேவ்ஜி இந்த அறிக்கைக்காக நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்!" என்று ட்வீட் செய்துள்ளார்.

சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத்தும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்ததோடு, பெண்கள் குறித்த சர்ச்சையான கருத்து தெரிவிக்கப்பட்டபோது அம்ருதா பட்னாவிஸ் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், " சத்ரபதி சிவாஜியை அவமதிக்கும் வகையில் ஆளுநர் கருத்து கூறும்போதும், கர்நாடக முதல்வர் மகாராஷ்டிரா கிராமங்களை கர்நாடகாவுக்கு இணைப்பதாக மிரட்டும் போதும், தற்போது பாஜக பிரசாரகர் ராம்தேவ் பெண்களை இழிவுபடுத்தும்போதும் அரசு மவுனம் காக்கிறது. டெல்லிக்கு அரசு நாக்கை அடகு வைத்து விட்டதா?" என கண்டனம் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in