திருமணத்தை மீறிய உறவு துண்டிப்பு; கணவருடன் சென்ற பெண் கழுத்து அறுத்துக் கொலை: ஆண் நண்பர் வெறிச்செயல்

கொலை
கொலை

சாத்தூர் அருகே முறையற்ற காதல் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி.  இவரது மனைவி ராஜேஸ்வரி(40). இவர்களுக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்தநிலையில் ராஜேஸ்வரிக்கும்  சங்கரநத்தம் பகுதியை சேர்ந்த பரமசிவம்(50) என்பவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ராஜேஸ்வரிக்கும் முத்துபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் ராஜேஸ்வரி, முத்துபாண்டி இருவரும் பேசி நேற்று சமாதானமாகி உள்ளார்கள். இதனையடுத்து  இருவரும் சேர்ந்து வாழ்வதாக முடிவெடுத்து,  ராஜேஸ்வரி வாடகை வீட்டை காலி செய்து முத்துபாண்டியின் சொந்த ஊரான ரெட்டியாப்பட்டிக்கு செல்வதாக முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் ராஜேஸ்வரி இன்று காலை கழுத்து அறுபட்ட நிலையில் வாடகை வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் ஏழாயிரம்பண்ணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் ராஜேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணையில் ராஜேஸ்வரிக்கும்,  பரமசிவத்திற்கும் தொடர்பு இருந்து வந்ததும், தற்போது ராஜேஸ்வரி கணவருடன் செல்ல முடிவு செய்ததால்  இருவருக்கும் தகராறு ஏற்பட்டு  ராஜேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பரமசிவம்  தலைமறைவாகியிருக்கலாம்  என்றும்  தெரியவந்துள்ளது. அதனால் அவரிடம் விசாரணை செய்வதற்காக போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து ராஜேஸ்வரியின் கணவர் முத்துப்பாண்டியிடமும்  போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசபெருமாள் நேரில் ஆய்வு செய்தார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in