ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட குமரி பெண்: 24 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்ட ஆச்சரியம்!

ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட குமரி பெண்: 24 மணி நேரத்திற்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்ட ஆச்சரியம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற போது மாயமான பெண் 24 மணிநேரத்திற்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்ட ஆச்சரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகில் உள்ள பாரதப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவரது மனைவி புஷ்பபாய்(60). இந்தத் தம்பதிக்கு இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். புஷ்பபாய் பாரதப்பள்ளி பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நேற்று மதியம் குளிக்கச் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புஷ்பபாயின் குடும்பத்தினர் கொடுத்தத் தகவலின்பேரில் குலசேகரம் தீயணைப்பு நிலைய போலீஸார் புஷ்பபாய் மாயமான பகுதியில் தேடிவந்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

குலசேகரம் தீயணைப்பு நிலைய போலீஸார் தொடர் மழைக்கு நடுவிலும், இடைவிடாத தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று 12 மணியளவில் திக்குறிச்சி பகுதியில் பெண் ஒருவர் தலையை மட்டும் தூக்கிய நிலையில் தண்ணீரில் கிடந்தார். தீயணைப்பு வீரர்கள் அவரைப் பார்த்ததும் மீட்டு கரைக்குக் கொண்டுவந்தனர். அப்போது புஷ்பபாய்க்கு உயிர் இருப்பது தெரியவந்தது. உடனே ஆம்புலன்ஸ் வருகைக்காக காத்திருக்காமல் மின்னல் வேகத்தில் செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஒரு டெம்போவில் ஏற்றி புஷ்பபாயை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

புஷ்பபாய் தண்ணீரில் மாயமான பகுதிக்கும், அவர் மீட்கப்பட்ட பகுதிக்கும் இடையே 5 கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் உள்ளது. மாயமாகி 24 மணி நேரத்திற்குப் பின்பும், அவரை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டச் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in