மனுஸ்மிருதி எரித்து, சிகரெட் பற்ற வைத்த ஆசிரியை

மனுஸ்மிருதி எரிக்கும் பிரியா தாஸ்
மனுஸ்மிருதி எரிக்கும் பிரியா தாஸ்

மனுஸ்மிருதி நூலை எரித்து சிகரெட் பற்ற வைத்த பிஹார் ஆசிரியை தொடர்பான வீடியோ புதிய சர்ச்சைக்கு தூபமிட்டிருக்கிறது.

தேசிய அளவில் வைரலாகி வரும் இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் பலவேறான விவாதங்களுக்கு வழிகோலி உள்ளது. அந்த வீடியோவில் பெண் ஒருவர் அடுப்பில் அசைவம் சமைக்கிறார். அப்படியே மனுஸ்மிருதி நூலின் பிரதியை எரிக்கிறார். அந்த நெருப்பில் சிகரெட் ஒன்றை பற்றவைத்து புகை விடுகிறார். இந்த வீடியோவை அவரே எடுத்து பொதுவெளியில் பகிர்ந்ததாக தெரிகிறது.

விசாரணையில் அவர் பெயர் பிரியா தாஸ் என்றும், பிஹாரை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த அவர், பயிற்சி ஆசிரியராக பணியாற்றுவதும் தெரிய வந்தது. பிரியா தாஸ் பின்னர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “புத்தகம் என்பது அறிவையும் கல்வியையும் புகட்டுவதாக அமைய வேண்டும். மனுஸ்மிருதி அப்படியானதல்ல. மக்கள் மத்தியில் பாகுபாடுகளை விதைக்கும் பிற்போக்கு நூலை எரிக்கும் விதமாக என எதிர்ப்பினை பதிவு செய்திருக்கிறேன். இந்த போராட்டம் அம்பேத்கர் காலம் தொட்டு தொடர்ந்து வருகிறது. எந்த ஒரு தனிப்பட்ட நபரின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவோ, எந்தவொரு அரசியல் தலைவருக்கும் எதிரானதாகவோ இதனை செய்யவில்லை” என விளக்கம் தந்திருக்கிறார்.

வழக்கம்போல பிரியா தாஸ் செயலை முன்வைத்து சமூக ஊடகம் ரெண்டுபட்டிருக்கிறது. ’அம்பேத்கர் வழியில் பிரியா தாஸின் போர்க்குணம் போற்றத்தக்கது’ என்று புகழ்வோர் மத்தியில், ‘இது சகிப்பின்மையை காட்டுகிறது. இந்துக்களின் மரியாதைக்குரிய நூலை எரிப்பதுபோல, இதர மதத்தினர் புனித நூலை இவரால் எரித்துவிட முடியுமா’ என்று சிலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in