
காதலனுடன் டூவீலரில் சென்ற இளம்பெண்ணை 10 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், பாகூர் மாவட்டத்தில் உள்ள படேர்கோலா கிராமத்தில் தனது காதலனுடன் 26 இளம்பெண் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது படேர்கோலா உயர் நிலைப்பள்ளி மைதானம் பகுதியில் 10 பேர் கொண்ட கும்பல் அவர்களைத் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தியது.
அத்துடன் அப்பெண்ணின் காதலனை அடித்து துரத்தி விட்டு 10 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணைத் தூக்கிச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்தது. இதனால் இளம்பெண் சுயநினைவு இழந்தார். இதனால் அவர் உயிரிழந்து விட்டதாக நினைத்து அந்த கும்பல் அவரை விட்டுச் சென்றது. இதன் பின் சுயநினைவு திரும்பிய இளம்பெண், நடந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். உடனடியாக மகேஷ்பூர் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 376 டி பிரிவின் கீழ் 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளம்பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சிறப்பு புலனாய்வுக்குழு அஜித்குமார் தலைமையில் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.
ஜார்க்கண்டில் இதுபோல கூட்டுப் பலாத்காரச் செயல் நடப்பது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இம்மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள விமான நிலையப்பகுதியில் தனது ஆண் நண்பருடன் இருந்த பெண் தொழில்நுட்பக் கலைஞர் 10 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இருவர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.