2 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளம்பெண் சாக்கு மூட்டையில் பிணமாக மீட்பு: கொன்று சாக்கடையில் வீசிய வாலிபர் கைது

2 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளம்பெண் சாக்கு மூட்டையில் பிணமாக மீட்பு: கொன்று சாக்கடையில் வீசிய வாலிபர் கைது

2 மாதங்களுக்கு முன் காணாமல் போன இளம்பெண் அவரது நண்பரால் கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வீசப்பட்ட சம்பவம் ஹரியாணாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம் கர்னால் மாவட்டத்தில் உள்ள சாக்கடையில் சாக்குமூட்டை கிடந்துள்ளது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், அந்த சாக்குமூட்டையைப் பிரித்துப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். அதில், ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருப்பது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஹரியாணா மாநிலம் சம்பல்கா நியூ ப்ரீதம் நகரைச் சேர்ந்த ரேணு என்பது தெரிய வந்தது. இவருக்கும் பர்விந்திரா என்பவருக்கும் 2005-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. ரேணு மருந்தகம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 19-ம் தேதி ஸ்கூட்டியில் வேலைக்கு சென்ற பின் அவர் காணவில்லை என்று அவரது கணவர் பர்விந்திரா காவல் நிலையத்தில் புகார் செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீஸார் பர்விந்திராவிடம் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது ரவீந்திரன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து ரவீந்திரனைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," பர்னிச்சர் கடையில் வேலை செய்யும் ரவீந்திரனுக்கும், ரேணுவிற்கும் நான்கு ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது. எட்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ரவீந்திரனுடனான உறவை ரேணு முறித்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவீந்திரன் ரேணுவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். செப்.19-ம் தேதி ரேணுவைக் கொன்று அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி சாக்கடையில் வீசியுள்ளார். சாக்கடைக்குள் மூழ்கிக் கிடந்த ரேணுவின் உடலையும், அவரது ஸ்கூட்டியையும் மீட்டுள்ளோம்" என்றனர்.

"ஏற்கெனவே ரவீந்திரன் மீது போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும், அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் ரேணு உயிரிழந்திருக்கமாட்டார் " என்று அவரது சகோதரர் வினோத்குமார் கூறியுள்ளார். ரவீந்திரனை கைது செய்த போலீஸார் இக்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்னால் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in