கொடுத்த பணத்தைக் கேட்ட பெண் மைக்ரோ பைனான்சியர் கொன்று புதைப்பு: டெல்லியில் பயங்கரம்

மீனா
மீனா

கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட பெண் மைக்ரோ பைனான்சியர் கொன்று மயானத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்தவர் மீனா(54). இவர் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார். மைக்ரோ பைனான்சியரான மீனா, மேற்கு டெல்லியில் தெருவோர வியாபாரிகளுக்குக் கடன் கொடுத்து வசூலித்து வந்தார். இந்த நிலையில், ஜன.2-ம் தேதி முதல் மீனா காணாமல் போனார். இதுதொடர்பாக அவரது கணவர், போலீஸில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கு டெல்லி பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மீனாவின் செல்போனை அவர்கள் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநரான மொபின் மீது மீனா குடும்பத்திற்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஜன.7-ம் தேதி மொபின் மீது போலீஸில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் மொபினின் போன் உரையாடல்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, மொபின் தனது நண்பர்களுடன் சேர்ந்து மீனாவைக் கொன்று மயானத்தில் புதைத்தது தெரிய வந்தது.

இதுகுறித்து உயர் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஆட்டோ ஓட்டுநர் மொபின், அவரது நண்பர்களான தையல்கலைஞர் நவீன், முடிதிருத்தும் தொழிலாளி ரெஹான் ஆகியோருடன் சேர்ந்து மீனாவைக் கொன்று முஸ்லிம் மயானத்தில் புதைத்தது தெரிய வந்துள்ளது. மொபினுக்கு மீனா 15 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்திருந்தார். அந்த தொகையை அவர் திரும்பிச் செலுத்தவில்லை. இந்த நிலையில், மீண்டும் மீனாவிடம் மொபின் கடன் கேட்டுள்ளார். இதனால் மீனா கடன் தர மறுத்துள்ளார். இதனால் அவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து மீனாவைக் கொன்று அவரது நகைகளைக் கொள்ளையடித்து விட்டு அவரது உடலை மயானத்தில் புதைத்துள்ளார். இதையடுத்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனாவின் உடலை புதைக்க உதவிய மயான உதவியாளர் சையத் அலி குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

கொடுத்த கடனைக் கேட்ட பெண்ணைக் கொலை செய்து புதைத்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in