ஆட்டோ டிரைவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த பெண் சாராய வியாபாரி: அதிர்ச்சியூட்டும் பின்னணி

வனிதா
வனிதா

பிளஸ் 2 படிக்கும் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பிணியாக்கிய ஆட்டோ ஓட்டுநரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த பெண் சாராய வியாபாரி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் குறவன்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவமணி. ஆட்டோ ஓட்டுநர். இவரைக் காணவில்லையென அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர். இது தொடர்பாக சிவமணி நண்பர்கள், உறவினர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், கிழக்கு ராமபுரம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் சிவமணி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவரது ஆட்டோ எஸ்.புதூர் பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்தது.

இது தொடர்பாக ராமபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிவமணியை கொலை செய்தது யார் என்று தீவிரமாக விசாரித்து வந்தனர். அப்போது அப்பகுதி பெண் சாராய வியாபாரி வனிதா வீட்டிற்கு சிவமணி அடிக்கடி வந்து சென்றார் என்ற தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. இதனால் அங்கு சென்று பார்த்த போது வனிதா வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், வனிதாவின் செல்போன் எண்ணை வைத்து கடலூர் அருகே பதுங்கியிருந்த அவரை நேற்று மாலை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாயின.

பிளஸ் 2 படிக்கும் வனிதாவின் மகளை பள்ளிக்கு ஆட்டோவில் சிவமணி அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது அவரை ஏமாற்றி சிவமணி பாலியல் வன்கொடுமை செய்ததால்,பள்ளி மாணவி கர்ப்பமடைந்ததும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த வனிதா, தன் மகளைக் கெடுத்த சிவமணியைக் கொலை செய்ய திட்டமிட்டார்.

இதன்படி தனது நண்பர் சங்கருடன் கோயிலுக்குச் செல்வதாகக்கூறி ஆட்டோவில் சிவமணியுடன் சென்றுள்ளார். கிழக்கு ராமாபுரம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்தில் வைத்து சிவமணியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, வாழை சருகைகளைப் போட்டு அவரது உடலை மறைத்துள்ளனர். பிறகு ஆட்டோவை எடுத்து வந்து எஸ்.புதூர் என்ற இடத்தில் பள்ளத்தில் தள்ளி விட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து நேற்று நள்ளிரவு வனிதாவை கைது செய்த போலீஸார், அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த வனிதாவின் தம்பி வேல்முருகன், சங்கர் ஆகியோரைத் தேடி வருகின்றனர். ராமாபுரம் பகுதியில் சாராயம் விற்று வரும் வனிதா மீது 5 வழக்குகள் உள்ளன. தற்போது இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in