பயணிகள் அறையில் பெண்ணுக்கு பிரசவம்; துரிதமாக செயல்பட்ட பெண் காவலர்: தீபாவளியில் நெகிழ்ச்சி சம்பவம்!

பயணிகள் அறையில் பெண்ணுக்கு பிரசவம்; துரிதமாக செயல்பட்ட பெண் காவலர்: தீபாவளியில் நெகிழ்ச்சி சம்பவம்!

தீபாவளியன்று விரைவு ரயிலில் வந்த கர்ப்பிணி பெண் பயணிக்கு பிரசவம் பார்த்த ரயில்வே பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் வெஸ்ட் கோஸ்டு விரைவு ரயில் நேற்று மதியம் திருப்பத்தூர் ரயில் நிலையம் வந்தது. அப்போது சாந்தினி (29) என்ற நிறைமாத கர்பிணிப் பெண், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டி திருப்பத்தூர் ரயில் நிலைய அதிகாரியான தனது கணவர் அஸ்வின்குமாருடன் ரயிலில் புறப்பட்டு வந்தார். நிறைமாத கர்பினியான சாந்தினிக்கு ரயில் பயணத்தின் போது பிரசவவலி ஏற்பட்டது. ரயிலானது மதியம் 2.20 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடை எண் 2-க்கு வந்த போது நடைமேடை அலுவலில் இருந்த பரமேஸ்வரி என்ற பெண் தலைமைக் காவலர் துரிதமாக செயல்பட்டு உடனடியாக சாந்தினியை ரயிலில் இருந்து இறக்கி அருகில் இருந்த பயணிகள் தங்கும் அறைக்கு அழைத்துச் சென்று அமரவைத்து உடனிருந்து கவனித்துக் கொண்டார்.

இதற்கிடையே சாந்தினிக்கு பிரசவவலி அதிகமாகி சிறிது நேரத்தில் பயணிகள் தங்கும் அறையிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அரக்கோணம் ரயில்வே மருத்துவர்களால் சாந்தினிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சுமார் 3.20 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். மருத்துவமனையில் தாயும், சேயும் நலமுடன் உள்ள நிலையில் துரிதமாக செயல்பட்டு பிரசவ வலியால் அவதிப்பட்ட கர்ப்பிணிப் பெண்னை ரயிலில் இருந்து இறக்கி பயணிகள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்று பிரசவத்திற்கு உதவியாக இருந்த தலைமைக் காவலர் பரமேஸ்வரியை ரயில் பயணிகள், பொதுமக்கள் மற்றும் இருப்புப்பாதை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in