`ரியல் எஸ்டேட் அதிபரை கடத்த சொன்னது என் தோழிதான்'- நண்பரின் வாக்குமூலத்தால் சிக்கிய பெண் டாக்டர்

`ரியல் எஸ்டேட் அதிபரை கடத்த சொன்னது என் தோழிதான்'- நண்பரின் வாக்குமூலத்தால் சிக்கிய பெண் டாக்டர்

ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் உடந்தையாக செயல்பட்ட பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தி.நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் சரவணன்(46). ரியல் எஸ்டேட் அதிபரான சரவணனை கடந்த 20-ம் தேதி வீடு புகுந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்திமுனையில் காரில் கடத்தி சென்றதோடு, அவரது விலையுயர்ந்த இரு கார்கள், வாட்ச் ஆகியவற்றையும் திருடி சென்றது. உடனே சரவணனின் சகோதரர் அளித்த தகவலின் பேரில் மாம்பலம் போலீஸார் சிசிடிவி காட்சி மற்றும் காரின் எண்ணை வைத்து அடிப்படையாக வைத்து 2 மணி நேரத்தில் ஈ.சி.ஆர் பகுதியில் கடத்தல்காரர்களை போலீஸார் சுற்றி வளைத்தனர்.

பின்னர் கடத்தப்பட்ட சரவணனை பத்திரமாக மீட்டு கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கியராஜ்(42), கரூரை சேர்ந்த அரவிந்த் குரு, அப்ரோஸ், அஜய், விஜயபாண்டி, நாகேந்திரன் என்பது தெரியவந்தது. மேலும் ஆரோக்கியராஜ் மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து ரியல் எஸ்டேட், கட்டுமானம் மற்றும் மணல் வியாபாரம் செய்து வந்ததும், வியாபாரம் தொடர்பாக ஆரோக்கியராஜிக்கு தர வேண்டிய ஒரு கோடி ரூபாய் பணத்தை சரவணன் தராமல் ஏமாற்றி வந்ததால் அடியாட்களுடன் சேர்ந்து கடத்தியது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து மூன்று கார்கள், வாட்ச், 16 செல்போன்கள், 2 பொம்மை துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்த போலீஸார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே ஆரோக்கியராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, சரவணன் பல மாதங்களாக பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக தனது நெருங்கிய தோழியான பெண் மருத்துவர் அமிர்தா ஜூலியானாவிடம் ஆரோக்கியராஜ் தெரிவித்ததாகவும், அதற்கு பெண் மருத்துவர் அடியாட்களை அழைத்து சென்று சரவணனை கடத்தி பணத்தை வாங்குமாறு கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் அமிர்தா ஜுலியானா(45) என்பவரை மாம்பலம் போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மருத்துவர் அமிர்தா ஜூலியனா தி.நகர் ராமசாமி தெருவில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருவதும், ஆரோக்கியராஜிக்கு நெருங்கிய தோழியாக இருந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் மருத்துவரை சைதாப்பேட்டை நீதிமன்ற நடுவர் சுப்பிரமணி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, ஜூலியானா திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை காவல்துறையினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் ஜூலியானாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in