ஏடிஎம் கார்டை எடுத்து பணம் திருட்டு; அழிக்கப்பட்ட செல்போன் எஸ்எம்எஸ்: பெண் உதவியாளரால் பதறிய பத்திர எழுத்தர்

கைது செய்யப்பட்ட சாமுண்டீஸ்வரி
கைது செய்யப்பட்ட சாமுண்டீஸ்வரி

ஓய்வு பெற்ற கருவூல அதிகாரியின் அலுவலகத்தில்  உதவியாளராக வேலை பார்க்கும் பெண் ஒருவர்  அவரது ஏடிஎம் கார்டை திருடி அதன் மூலம்  கணவர் உதவியுடன் பலமுறை பணத்தை எடுத்திருக்கும்  சம்பவம் காரைக்காலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரைக்கால் மாதா கோயில் வீதியைச் சேர்ந்தவர்   ராமசாமி(78). அரசு கருவூலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசாமி, தனது  மகன் வைத்திருக்கும்  பத்திரங்கள் எழுதிக் கொடுக்கும் அலுவலகத்தில் மகனுக்கு உதவியாக இருந்து வருகிறார். பிரெஞ்சு மற்றும் ஆங்கில ஆவணங்களை  மொழி பெயர்க்கும் பணியை செய்து வருகிறார்.  அந்த அலுவலகத்தில் கணினி தட்டச்சு செய்யும் வழியில் இரண்டு பெண் ஊழியர்களும் பணி புரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ராமசாமி தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக நேற்று வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் பணம் குறைவாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது,  கடந்த 15 நாட்களில் அவரது ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி வெவ்வேறு நாட்களில் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தம் 2 லட்சத்து 19 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட கார்த்திகேயன்
கைது செய்யப்பட்ட கார்த்திகேயன்

ஆனால் அவர் ஒருநாளும் ஏடிஎம் அட்டை மூலமாக பணம் எடுத்ததே இல்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து வங்கி அதிகாரிகளிடம் விஷயத்தை கூறி இது பற்றிய மேலும் விவரங்களை தருமாறு அவர் கேட்டார்.  இதையடுத்து ஏடிஎம் அட்டையை மூலமாக பணம் எடுக்கப்பட்ட ஏடிஎம்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது  அவர்களின்  அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் சாமுண்டீஸ்வரி என்பவர்  தனது கணவர் கார்த்திகேயனுடன் சேர்ந்து  ராமசாமி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்துள்ளது தெரியவந்தது.

இது குறித்து ராமசாமி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  அந்த  புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் சாமுண்டீஸ்வரி தனது கணவர் மூலமாக 2 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்திருப்பதும், அதன் மூலம்  புதிதாக இரு சக்கர வாகனம் வாங்கியுள்ளதும் தெரியவந்தது.  இதையடுத்து  ராயன்பாளையத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி(28), அவரது கணவர் கார்த்திகேயன்(36) ஆகிய 2 பேரையும்  கைது செய்த போலீஸார், காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

``தன் மகள் போல நினைத்து தனது செல்போனைகூட அவரிடம் தான் கொடுத்து வைத்திருப்பேன். ஆனால் எனது ஏடிஎம் கார்டை திருடி அதிலிருந்து பணம் எடுக்கும்போது எனது செல்போனுக்கு  வரும் குறுந்தகவல்களையும் கூட  சாமுண்டீஸ்வரி அழித்திருக்கிறார் என்று நினைக்கும்போது மனம் வேதனையாக இருக்கிறது'' என்று பெரியவர் ராமசாமி போலீஸாரிடம் புலம்பினார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in