முதலீடு பணம் 7 லட்சம் கொடுக்க மறுப்பு; டாக்டரை கடத்திய பெண்: 3 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி

கடத்தலில் ஈடுபட்ட வைசாலி மற்றும் கூட்டாளி
கடத்தலில் ஈடுபட்ட வைசாலி மற்றும் கூட்டாளி

சென்னையில் கடத்தப்பட்ட மருத்துவமனை உரிமையாளரை 3 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். பெண் உட்பட 4 கடத்தல்காரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அம்பத்தூர் லெனின் நகரில் வசிப்பவர் சுந்தரமூர்த்தி(54). இவர் திருமுல்லைவாயில் குளக்கரை பகுதியில் சொந்தமாக மருத்துவமனை மற்றும் மருந்தகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது மருத்துவமனையை விரிவுபடுத்த எண்ணிய சுந்தரமூர்த்தி மருத்துவமனையில் முதலீடு செய்பவருக்கு அதிக லாபம் தருவதாக கூறி விளம்பரம் செய்துள்ளார். இவரது விளம்பரத்தை பார்த்து ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த வைசாலி(28) என்ற பெண் 7 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். 6 மாதங்கள் ஆகியும், சுந்தரமூர்த்தி கூறியது போல் லாபம் எதுவும் கொடுக்காததால் வைசாலி தான் மூதலீடு செய்த 7 லட்ச ரூபாயை திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் சுந்தரமூர்த்தி பணத்தை திருப்பி தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளார்.

கடத்தலில் ஈடுபட்ட வைசாலியின் கூட்டாளிகள்
கடத்தலில் ஈடுபட்ட வைசாலியின் கூட்டாளிகள்

இந்த நிலையில் நேற்று சுந்தரமூர்த்தியை தொடர்பு கொண்ட வைசாலி, பணத்தை திருப்பி தருமாறு கூறியிருக்கிறார். உடனே சுந்தரமூர்த்தி நேரில் வருமாறு கூறியதன் பேரில் இரவில் வைசாலி, 4 பேருடன் சுந்தரமூர்த்தியை சந்திக்க வந்துள்ளார். திருமுல்லைவாயில் சரஸ்வதி நகரில் உள்ள டீகடை முன்பு வைசாலி மற்றும் சுந்தரமூர்த்தி சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது, சுந்தரமூர்த்தி பணம் தர மறுத்ததால் வைசாலி தனது நண்பர் மற்றும் உறவினருடன் சேர்ந்து சுந்தரமூர்த்தியை காரில் கடத்தி சென்றனர். இதனை பார்த்து அங்கிருந்து பொதுமக்கள், காவல்துறை மற்றும் சுந்தரமூர்த்தி உறவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சுந்தரமூர்த்தி மகள் விஷ்ணு பிரியா இது குறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சியை வைத்து கார் மற்றும் அதன் உரிமையாளர் விலாசத்தை கண்டுபிடித்த போலீஸார், பல்லாவரம் சென்று அங்கு கடத்தி வைத்திருந்த சுந்தரமூர்த்தியை 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டு அழைத்து வந்தனர்.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட பல்லாவரத்தை சேர்ந்த வைசாலி (28), அவரது மாமா சிவா(32), வழக்கறிஞர் தேவக்குமார்(26) மற்றும் நண்பர் பாரதிதாசன்(39) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சுந்தரமூர்த்தி முதலீடு செய்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததால் கடத்தி சென்று பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in