கிராமங்களில் புகுந்து சுட்டுத்தள்ளிய கிளர்ச்சியாளர்கள்: எத்தியோப்பியாவில் 230 பேர் படுகொலை

கிராமங்களில் புகுந்து சுட்டுத்தள்ளிய கிளர்ச்சியாளர்கள்: எத்தியோப்பியாவில் 230 பேர் படுகொலை

எத்தியோப்பியாவின் ஒரோமியா பகுதியில் உள்ள கிராமங்களில் புகுந்து கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 230க்கும் மேற்பட்ட அமாரா இன மக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட எத்தியோப்பியா நாட்டில் உள்நாட்டு போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தகைய சூழலில் சமீபத்தில் நடந்த கொடிய தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த தாக்குதலில் இருந்து தப்பிய கிம்பி கவுண்டியில் வசிக்கும் அப்துல் செய்து தாஹிர் என்பவர், “நான் 230 உடல்களை எண்ணிவிட்டேன். வாழ்நாளில் நாங்கள் பார்த்த பொதுமக்களுக்கு எதிரான மிகக் கொடிய தாக்குதல் இதுதான்”என்று தெரிவித்துள்ளார். "நாங்கள் கொல்லப்பட்டவர்களை மொத்தமாக புதைகுழிகளில் புதைக்கிறோம், இன்னும் சடலங்களை தேடிக் கண்டுபிடித்து வருகிறோம். ஃபெடரல் இராணுவப் பிரிவுகள் இப்போது வந்துவிட்டன, ஆனால் அவர்கள் வெளியேறினால் மீண்டும் தாக்குதல்கள் தொடரக்கூடும் என்று அஞ்சுகிறோம். மீள்குடியேற்றத் திட்டங்களில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் குடியேறிய அமாரா இனத்தவர் தற்போது கோழிகளைப் போலக் கொல்லப்படுகிறார்கள்" என மற்றொரு சாட்சியான ஷம்பெல் என்பவர் கூறினார்

இந்த தாக்குதல்களுக்காக ஒரோமோ லிபரேஷன் ஆர்மி எனும் கிளர்ச்சியாளர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர். ஓரோமியா பிராந்திய அரசாங்கமும் இந்த கிளர்ச்சியாளர்கள்தான் இப்படுகொலைக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் இந்த கிளர்ச்சியாளர்கள் குழு தாங்கள் இத்தாக்குதலை நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள எத்தியோப்பியாவின் பல பிராந்தியங்களில் பரவலாக இன பதற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. 110 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட எத்தியோப்பியாவில் இரண்டாவது பெரிய இனக்குழுவான அமாரா இன மக்கள், ஓரோமியா போன்ற பகுதிகளில் அடிக்கடி குறிவைக்கப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in