பெங்களூரு பெருவெள்ளம்: நீர்நிலை ஆக்கிரமிப்புப் பட்டியலில் விப்ரோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள்!

பெங்களூரு பெருவெள்ளம்: நீர்நிலை ஆக்கிரமிப்புப் பட்டியலில் விப்ரோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள்!

கடந்த சில நாட்களாக பெங்களூருவை உலுக்கியெடுத்த மழைவெள்ளத்தின் பின்னணியில், தனியார் நிறுவனங்களின் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இருந்தது குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில், மருத்துவமனைகள், கட்டுமான நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் எனப் பல நிறுவனங்கள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது மாநகராட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரியவந்திருக்கிறது.

பெங்களூரு மாநகராட்சி (பிருகத்து பெங்களூரு மகாநகர பாலிகே) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், விப்ரோ, ஈக்கோ ஸ்பேஸ், பிரெஸ்டீஜ், கொலம்பியா ஆசியா மருத்துவமனை, திவ்யஸ்ரீ வில்லாஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இந்நிறுவனங்கள் நகரில் உள்ள 696 இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியிருப்பதாக மாநகராட்சி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக, மகாதேவபுரா பகுதியில் மட்டும் 175 வடிகால்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கின்றன.

இப்படி மழைநீர் வடிகால்கள் இருக்கும் இடம் தெரியாத வகையில் கட்டிடங்கள் முளைத்ததால், மழை நீர் வடியாமல் பெருவெள்ளமாகப் பாய்ந்து பெரும் சேதத்தை விளைவித்துவிட்டது.

இதற்கிடையே, சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களிலிருந்து வெளியேறச் சொல்லி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார். சாமானியர்கள், தொழிலதிபர்கள் என யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல், வரும் வாரங்களில் அவர்களின் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்திருக்கிறார்.

திங்கள்கிழமையிலிருந்தே (செப். 12), ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தொடங்கிவிட்டன. மகாதேவபுரா பகுதியில் புல்டோசர்கள் மூலம் இந்தப் பணிகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in