மோடியின் இடத்துக்கு நகர்கிறாரா யோகி?

மோடியின் இடத்துக்கு நகர்கிறாரா யோகி?

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும், உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்லப்போவது யார் என்று ஒவ்வொரு நாளும் ஊகங்கள் உச்சமடைந்துவருகின்றன. உ.பி முதல்வர் பதவி யாருக்கு எனும் மாநில அளவிலான கேள்வியுடன், இன்னொரு முக்கியமான கேள்வியும் எழுந்திருக்கிறது. அது, அடுத்த பிரதமர் யார் எனும் அகில இந்திய அளவிலான கேள்வி!

2024-ல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மோடிக்கு நிகரான பிரதமர் வேட்பாளராக இதுவரை யாரும் உருவாகவில்லை என்றே கருதப்படுகிறது. ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி எனப் பலரின் பெயர்களும் பேசப்பட்டாலும் யாரும் தேசிய அளவில் தங்களை இன்னமும் அந்த அளவுக்குத் தயார்செய்துகொள்ளவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. பாஜகவை வீழ்த்தும் காங்கிரஸின் வியூகங்கள் பலமாக இல்லை. பாஜக பலம் பெற்றுக்கொண்டே செல்வதற்குக் காங்கிரஸ்தான் காரணம் என்று மம்தா பானர்ஜி விளாசியிருக்கிறார். ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் தேசிய அளவில் கோதாவில் குதிக்கத் தயாராகிவருகின்றன. எனவே, மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது சாத்தியமா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

போதாக்குறைக்கு பாஜக இன்னும் 40 ஆண்டுகளுக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் என்கிற ரீதியில், பிரசாந்த் கிஷோர் வேறு ஆருடம் கூறிவிட்டார். எனவே, 2024 தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு இதுவரை பெரிய அளவில் சவால்கள் உருவாகிவிடவில்லை. ஒருவேளை அந்தத் தேர்தலில் பாஜகவே வென்றால், மோடி 3-வது முறையாகப் பிரதமராகிவிடுவார். ஆனால், அவர் பிரதமர் பதவியில் நிலைப்பாரா என்பது பாஜகவுக்குள்ளும் வெளியிலும் எழுந்திருக்கும் முக்கியமான கேள்வி.

காரணம் வயது அடிப்படையில் பாஜகவில் பின்பற்றப்படும் நடைமுறைதான். ஆம், பாஜகவில் 75 வயதுக்கு மேல் யாரும் அரசுப் பதவிகளில் இருக்கக்கூடாது என்பது, அக்கட்சியின் எழுதப்படாத விதியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மோடிக்கு இப்போது 71 வயதாகிறது. 2024-ல் அவருக்கு 73 வயதாகிவிடும். எனவே, 2024 தேர்தலில் பாஜக வென்றால் அவரே பிரதமர் பதவியில் நீடிப்பார். ஆனால், அடுத்த 2 ஆண்டுகளில் அவர் பாஜக கணக்குப்படி ‘ஓய்வுபெறும்’ நிலைக்குச் சென்றுவிடுவார். பாஜகவில் இதுவரை இருந்த தலைவர்களைவிடவும் செல்வாக்கான தலைவராக இருப்பவர் என்பதால், அவருக்காக ‘மூப்பு அடிப்படையில் ஓய்வு’ எனும் நடைமுறையில் சலுகை காட்டப்படுமா என்பதை இப்போதைக்குக் கணிக்க முடியாது. ஒருவேளை, தனிநபர்களைவிடவும் கட்சிதான் முக்கியம் என இயங்கிவரும் பாஜகவில் அவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு, அவருக்குப் பதிலாக வேறொருவரைப் பிரதமராக்க பாஜக முடிவெடுத்தால் அடுத்த பிரதமர் வாய்ப்பு யாருக்கு என்பதுதான் முக்கியமான கேள்வி.

கட்சியில் மோடியை அடுத்து அல்லது கிட்டத்தட்ட அவருக்கு நிகரான அதிகாரம் படைத்தவராக இருப்பவர் அமித் ஷா. தேர்தல் வெற்றிகளுக்காக எதையும் செய்யக்கூடிய தலைவராகப் பார்க்கப்படும் அமித் ஷாவுக்கு 57 வயதுதான் ஆகிறது. எனவே, அவருக்கு வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. ஆனால், அவரைவிடவும் முக்கியமான நபராகப் பார்க்கப்படுபவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தான். சில மாதங்களுக்கு முன்னர் ஒரு செய்தி சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில், அமித் ஷாவைவிடவும் யோகிக்கே மக்களிடம் அதிக ஆதரவு இருப்பது தெரியவந்திருக்கிறது. அடுத்த பிரதமர் யார் எனும் கேள்வி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளையும் உள்ளடக்கிய பொதுவான கேள்வியாகக் கேட்கப்பட்டபோது முதல் 3 இடங்களில் மோடி, அமித் ஷா, யோகி என பாஜக தலைவர்கள் பெயர்களே தெரிவுசெய்யப்பட்டன. பாஜகவிலிருந்து யார் அடுத்த பிரதமராக வருவார் எனும் கேள்விக்கு மோடியை அடுத்து அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் யோகிதான். எனவே, 2024-ல் பாஜக வென்றால், 2025 அல்லது 2026-ல் யோகிதான் பிரதமர் என்று சொல்லிவிடலாம்.

ஆனால், அதற்கு முன்னர், 2022-ல் நடக்கவிருக்கும் உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் யோகி வென்று முதல்வராவரா என்பது முக்கியமான விஷயம்.

இன்றைய தேதியில் உத்தர பிரதேசத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துத்தான் களமிறங்கவிருக்கிறது. சமாஜ்வாதி கட்சி மட்டுமே பாஜகவை எதிர்கொள்ளும் திறன் கொண்ட கட்சியாக பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேச மக்கள்தொகையில் 20 சதவீதமாக இருக்கும் முஸ்லிம்களின் வாக்கு மிக முக்கியத்துவம் கொண்டது. ஆனால், காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைக்காத சூழலில் அந்த வாக்குகள் சிதறுவதற்கே வாய்ப்பு அதிகம். அம்மாநில மக்கள்தொகையில் 12 சதவீதமாக இருக்கும் பிராமணர்களின் வாக்குகள், கடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் பாஜகவுக்கே கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதேபோல, பட்டியலினச் சமூகத்தில் ஜாதவ்கள் தவிர பிற சாதியினர் பகுஜன் சமாஜுக்குப் பதிலாக பாஜகவுக்கே ஆதரவளிக்கிறார்கள். அதேபோல பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் யாதவ்கள், குர்மிகளைத் தவிர பிற சாதியினர் பாஜகவுக்கே ஆதரவளிக்கிறார்கள்.

லக்கிம்பூர் கெரியில், விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது மத்திய இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் பயணம் செய்த கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம், உத்தர பிரதேச விவசாயிகள் மத்தியில் பாஜகவுக்கு நிச்சயம் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், முந்தைய தேர்தலைவிட இந்த முறை பல தொகுதிகளை பாஜக இழக்கக்கூடும். ஆனால், மற்ற அனைத்து அமசங்களை வைத்துப் பார்க்கும்போது பாஜக வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம் எனக் கருதப்படுகிறது. ஏபிபி- சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் எனத் தெரியவந்திருக்கிறது.

ஆக, உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வென்று, 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜக வென்றால் இன்னும் சில ஆண்டுகளில் யோகியைப் பிரதமராகக் காணும் வாய்ப்பு இந்தியர்களுக்குக் கிட்டலாம்.

மோடிக்கும் யோகிக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.மோடியைப் போலவே யோகிக்கும் கட்சிக்குள் தனிநபர் செல்வாக்கு உண்டு. மோடியைப் போலவே கூட்டத்தை ஈர்க்கும் வகையில் மக்களின் மொழியில் பேசக்கூடியவர் யோகி. இருவருமே ஆட்சி நிர்வாகத்தில் தங்களது நேரடிக் கட்டுப்பாடும், கண்காணிப்பும் இருக்க வேண்டும் என்பதைக் கறாராகப் பின்பற்றுபவர்கள். எதிர்க்கட்சிகளையும் ஊடகங்களையும் கட்டுப்படுத்துவதில் இருவருமே கைதேர்ந்தவர்கள்.

மோடி திருமணமாகியும் தனியாக வசிப்பவர். யோகி திருமணமே ஆகாதவர். சந்நியாசி வேறு. எனவே, ‘தனக்கென குடும்பம் இல்லாததால் ஊழல் செய்து சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாதவர்’ எனும் அடைமொழி மோடிக்குப் பயன்பட்டதுபோல யோகிக்கும் பயன்படலாம். அதையெல்லாம் பெரிய அளவில் பேசுபொருளாக்குவதில் பாஜகவினர்தான் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே!

மோடியைவிடவும் தீவிர இந்துத்துவவாதியாக, வெறுப்புப் பேச்சு பேசக்கூடியவராக, அடக்குமுறை செய்வதை அரசு நிர்வாக உத்தியாகக் கருதுபவராக அறியப்பட்டிருக்கும் யோகி அடுத்த பிரதமரானால், இன்றுவரை மோடியை விமர்சித்துக்கொண்டிருப்பவர்கள் 'மோடி எவ்வளவோ தேவலாம்' என்றும் சொல்லக்கூடும். அரசியலில்தான் எதுவும் நடக்குமே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in