காயத்ரி ரகுராமை திமுகவில் சேர்ப்பீர்களா? - அமைச்சர் பொன்முடியின் அதிரடி பதில்

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி hindu கோப்பு படம்

"திராவிட மாடல் கொள்கையை பின்பற்றுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு திமுகவில் இடம் உண்டு - அது காயத்ரி ரகுராமுக்கும் பொருந்தும்" என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழா குழு இணைந்து நடத்தும் கவிஞர் தமிழ் ஒளி நினைவு அறக்கட்டளை தொடக்க விழா சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு கவிஞர் தமிழ்ஒளி நினைவு அறக்கட்டளையைத் தொடங்கி வைத்தார். அவருடன் கவிஞர் ஈரோடு தமிழன்பன், பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது, “தமிழ் எழுத்தாளர்கள்,அறிஞர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நோக்கோடு முதலமைச்சர் பல விஷயங்களை செய்து வருவதை யாரும் மறுக்கமுடியாது. தமிழ் பாடத்தை எப்படி எல்லாம் சிறப்பிக்க வேண்டும் எனவும் முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமையும், இட ஒதுக்கீட்டையும் வழங்கியவர் முதல்வர். அந்த வகையில் கவிஞர் தமிழ் ஒளியின் புத்தகங்கள், நாடகங்கள் ஆகியவற்றை வெளிக்கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்ணாமலை பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என காவல்துறையை குறை சொல்கிறார். இதைச் சொல்ல அவருக்குள்ள தகுதியைப்பற்றி காயத்ரி ரகுராமை தான் நீங்கள் கேட்க வேண்டும். பெண்களின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருபவர் முதல்வர். அண்ணாமலை எந்த அடிப்படையில் எதற்காக சொல்கிறார் என்று தெரியாது. சில விஷயங்கள் சில இடங்களில் தவறுகள் நடக்கலாம். காவல்துறையும் அதைக் கண்டித்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழக முதலமைச்சர் மிகச் சிறப்பாக காவல்துறையை கையாண்டு அனைத்து தரப்பு மக்களின் உரிமையையும், பாதுகாப்பையும் நிலை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். அண்ணாமலைக்கு அதெல்லாம் தெரியாது.

அனைத்து இடங்களிலும் தமிழ்மொழி பாடம் வரவேண்டும் என்பதற்காக அனைத்து பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. உயர்கல்வி துறை தான் இந்த பாடத்திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளை நிச்சயமாக செய்வோம்”என்றார்.

கடைசியாக செய்தியாளர்கள் பாஜகவில் இருந்து வெளியேறிவிட்ட காயத்ரி ரகுராமை திமுகவில் சேர்த்துக் கொள்வீர்களா? எனக் கேட்டனர். அதற்கு அமைச்சர் பொன்முடி, “இது திமுக தலைவரிடம் கேட்கப் பட வேண்டிய கேள்வி. யார் வந்தாலும் தலைவர் வரவேற்பார். வருபவர்கள் இந்த இயக்கத்தை, திராவிட மாடலை , திராவிடக் கொள்கை மற்றும் பெரியார் கொள்கையை ஏற்றுக்கொண்டு , அண்ணா, கலைஞர் கொள்கையை ஏற்றுக் கொண்டு வந்தால் தலைவர் புறக்கணிப்பதில்லை. தலைவர் அவர்களுக்கும் ஆதரவளித்து இயக்கத்தை வளர்ப்பார்” என்றார்.  

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in