பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்: முதல்வர் இன்று முடிவு!

அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
கோப்பு படம்
கோப்பு படம்The Hindu

பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்தும், அதனுடன் ரொக்கம் சேர்த்து வழங்குவது தொடர்பாகவும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இறுதி ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட ஏதுவாக மாநில அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு பரிசு வழங்குவது வழக்கமாக உள்ளது. கடந்தாண்டு அரிசி, வெல்லம், கரும்பு என பண்டிகைக்கான 21 அத்தியாவசிய பொருட்களுடன் பரிசுத் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்தக்காரர்களின் குளறுபடியால் வெல்லம் உள்ளிட்ட ஒரு சில பொருட்களின் தரம் கேள்விக்குறியானது.

ஒப்பந்தக்காரர்களின் குளறுபடியால் தரமற்ற பொருட்களின் விநியோகம் மற்றும் அதையொட்டிய எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களால் திமுக அரசுக்கு தலைவலியானது. முறைகேட்டில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களுக்கு எதிரான வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த அனுபவத்தின் அடிப்படையில் இம்முறை தரமான பொருட்களுடன் பரிசுத் தொகுப்பை வழங்குவது குறித்து அரசு பல சுற்று ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சர்ச்சைகளை தவிர்க்க பரிசுத் தொகுப்புக்கு பதிலாக ரொக்கமாகவே அளித்துவிடலாம் என்றும் மூத்த அமைச்சர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுடன், ரொக்கத்தொகையும் சேர்த்தே வழங்கப்பட்டது. திமுக ஆட்சியின் முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலில் ரொக்கத் தொகை வழங்கப்படாதது குறித்து அதிமுக கடுமையாக கண்டனம் தெரிவித்தது.

இதனால் பரிசுத் தொகுப்பா அல்லது ரொக்கமா, பரிசுத் தொகுப்பு வழங்குவது எனில் அதன் உள்ளடக்க பொருட்களில் மாற்றம் ஏதேனும் செய்யலாமா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற இருக்கிறது. மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கெடுக்கும் இந்த கூட்டத்தில் மக்கள் மத்தியில் பரவலான எதிர்பார்ப்புக்குரிய, பரிசுத் தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1000 வழங்குவது தொடர்பாகவும் விவாதித்து முடிவு எட்டப்பட உள்ளது.

குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கு வாயிலாக ரொக்கத் தொகையை வழங்குவதில் எழுந்துள்ள நடைமுறை இடர்பாடுகள் குறித்தும், நியாயவிலைக் கடைகளில் கூட்ட நெருக்கடிக்கு வாய்ப்பின்றி நேரடியாக பயனாளர்களை ரொக்கத் தொகை எளிதில் சென்றடைவதற்கான இதர சாத்தியங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. கூட்டத்தின் நிறைவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அறிவிப்பு மற்றும் ரொக்கத் தொகை வழங்கப்படும் முறை உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in