மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு: விவசாயிகள், பொதுமக்களின் துயர் துடைப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

மயிலாடுதுறை நோக்கி செல்லும் வழியில்  முதல்வருக்கு விழுப்புரத்தில் ஆட்சியர் வரவேற்பு
மயிலாடுதுறை நோக்கி செல்லும் வழியில் முதல்வருக்கு விழுப்புரத்தில் ஆட்சியர் வரவேற்பு

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை  மாவட்டங்களை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் இன்று அப்பகுதிகளுக்கு விரைந்துள்ளார். இந்நிலையில் நேரில் வரும் முதல்வர் தங்களின் துயர் துடைப்பாரா என்று அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். 

122 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 44 செ.மீ மழை மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பெய்து  சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகள்  வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் 2,000-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் நீரால்  பாதிக்கப்பட்டுள்ளன. திருவிழந்தூர், மாப்படுகை, பொன்னூர், அளக்குடி,  ஆரப்பள்ளம், கோதண்டபுரம், மகேந்திரப்பள்ளி, ஆச்சாள்புரம், பாண்டூர், உக்கடை, அருள்மொழிதேவன், திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோயில், புதுப்பட்டினம், பூம்புகார், மணிக்கிராமம், மங்கைமடம், திருமுல்லைவாசல், வேட்டங்குடி, நாராயணபுரம், சூரக்குடி, செம்பனார்கோவில், தரங்கம்பாடி, மணல்மேடு, வெட்டாற்றங்கரை என பெரும்பாலான கிராமங்களில் சாலைகளில் மூழ்கடித்தவாறு நீர் பெருக்கெடுக்கிறது. குடியிருப்புகளை நீர் சூழ்ந்துள்ளது.  அனைத்து வயல்களுமே நீரால் முழுவதுமாக சூழப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்துள்ள  சாம்பா பயிர்கள்  அடியோடு நாசமாகி விட்டதாக விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர். 

இதனால் பாதிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களாக மிகப்பெரிய அவஸ்தைகளை சந்தித்திருக்கும் சீர்காழி தாலுகாவில் உள்ள அனைத்து குடிசை வீடுகளுக்கும் 25 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்,  நீரால் சூழப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்கும் ரூபாய் பத்தாயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும்,  மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தாலுகா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், அனைத்து விவசாய நிலங்களுக்கும் ஏக்கருக்கு முப்பதாயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  நேற்று வெளியிட்ட அறிக்கையில் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு 30,000 ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பூமியை  சுற்றி வளைந்து கிடக்கும் பெருங்கடல் ஊழிக்காலத்தில் பொங்கி எழுந்து அண்டத்தையே அழித்தபோது, உமாமகேசுவர் பிரணவத்தை தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இத்தலத்துக்கு வந்து தங்கித் திரும்பவும் அண்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது புராண வரலாறு. அதேபோல நீரால் மூழ்கி கிடக்கும் சீர்காழி தாலுகாவை உமாமகேஸ்வரர் போல முதல்வர் ஸ்டாலின் மீண்டும் உருவாக்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள், விவசாயிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து தரப்பினரும் முன்  வைத்திருக்கும் கோரிக்கைகளை செவிமடுத்து அவற்றை  முதல்வர் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள்  எதிர்பார்த்திருக்கின்றனர்.  முதல்வரின் இந்த வருகை அதனை சாத்தியமாக்குமா?  அனைவரின் ஏக்கமும் தீருமா? 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in