ராகுலுக்குத் துணை நிற்கும் ராவத்!

ஐ.மு கூட்டணியை மீட்டெடுக்க உதவுமா சிவசேனா?
சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்

கட்சிக்குள்ளும் வெளியிலும் பல்வேறு விமர்சனக் கணைகளை எதிர்கொண்டிருக்கும் காங்கிரஸ், சித்தாந்த ரீதியில் முற்றிலும் எதிரான கூட்டணிக் கட்சியான சிவசேனாவிடமிருந்து உறுதியான ஆதரவைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, ராகுல் காந்திக்கு ஆதரவாக சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துவரும் கருத்துகள் காங்கிரஸுக்குச் சற்றே தெம்பூட்டியிருக்கின்றன.

“ஐக்கிய முற்போக்குக் கூட்டணி எங்கே இருக்கிறது?” என நேரடியாகவும், “பெரும்பாலான நாட்களில் வெளிநாட்டிலேயே இருப்பவர் ராகுல்” என மறைமுகமாகவும் மம்தா பானர்ஜியிடமிருந்து வந்த விமர்சனத்துக்குப் பின்னர், காங்கிரஸ் மீது சஞ்சய் ராவத் காட்டும் இந்தப் பாசம், தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெறுகிறது.

தொட்டுத் தொடரும் உறவு

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில், காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது என்பதையெல்லாம் தாண்டி, தேசிய அளவிலான பல பிரச்சினைகளில் அக்கட்சியுடன் கைகோத்துச் செயல்படுகிறது சிவசேனா. பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு அக்கட்சி துணை நிற்கிறது. ராகுல் காந்தி மீது மட்டுமல்லாமல், பிரியங்கா காந்தி மீதும் நன்மதிப்பும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார் சஞ்சய் ராவத்.

லக்கிம்பூர் சம்பவத்தைக் கண்டித்துப் போராடிய பிரியங்கா காந்தி கைதுசெய்யப்பட்டபோது, ராகுலைச் சந்தித்துத் தனது ஆதரவைத் தெரிவித்தார் சஞ்சய் ராவத். அப்போது, பிரியங்கா காந்தியின் துணிச்சலை வெகுவாகப் பாராட்டினார். சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் தேச நலனில் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்பையும் சிலாகித்தார்.

இந்திரா காந்திக்கும், சிவசேனா தலைவர் பால் தாக்கரேவுக்கும் இடையில் ஆரம்பம் முதலே நல்ல நட்பு இருந்தது. 1975-ல் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அரசு அமல்படுத்தியபோது அதை ஆதரித்தவர் பால் தாக்கரே. சிவசேனாவின் ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் கட்சியினரின் ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருந்தன. மும்பையில் இடதுசாரிகளின் தொழிற்சங்கச் செயல்பாடுகளுக்கு எதிராக சிவசேனாவுடன் இணைந்து காங்கிரஸ் செயல்பட்டது. காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்த சிவசேனா, ஒருகட்டத்தில் ‘மராத்தியர்களுக்கான கட்சி’ எனும் நிலையிலிருந்து, இந்துத்துவக் கட்சியாக நிலைபெற்ற பின்னர் பாஜகவுடன் கைகோத்துச் செயல்பட்டது.

அதேசமயம் அரிதான சமயங்களில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாகவும் இருந்தது சிவசேனா. 2007-ல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட பிரதீபா பாட்டீலை சிவசேனா ஆதரித்தது. அதற்கு, அவர் மராத்தியர் என்பதை ஒரு காரணமாகச் சொன்னது வேறு விஷயம். அதேபோல், 2012-ல் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கும் சிவசேனா ஆதரவளித்தது.

இப்படிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் காங்கிரஸும் சிவசேனாவும் இணைந்து செயல்பட்டாலும், 2019 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் உருவான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசில், முதன்முறையாக காங்கிரஸும் சிவசேனாவும் அதிகாரபூர்வமாகக் கைகோத்து ஆட்சியில் அமர்ந்தன. அந்தச் சமயத்தில், இந்திரா காந்தி, பால் தாக்கரே ஆகியோர் இருக்கும் புகைப்படங்களுடன் சிவசேனா கட்சி சார்பில் மும்பையின் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இக்கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் படமும் அதில் இருந்தது.

பொது எதிரி பாஜக

இந்துத்துவா கொள்கை கொண்ட சிவசேனாவுடனான கூட்டணியில் இடம்பெறுவது குறித்த தயக்கமும் அதிருப்தியும் ராகுல் காந்தியிடம் உண்டு. ஆனால், இப்போது சிவசேனாவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுவிட்டது. அதற்கு முக்கியக் காரணம், பொது எதிரியான பாஜக!

காங்கிரஸ் எம்.பி, கே.சி.வேணுகோபால், சிவசேனா எம்.பி, பிரியங்கா சதுர்வேதியுடன் சஞ்சய் ராவத்...
காங்கிரஸ் எம்.பி, கே.சி.வேணுகோபால், சிவசேனா எம்.பி, பிரியங்கா சதுர்வேதியுடன் சஞ்சய் ராவத்...

இன்று தீவிர இந்துத்துவ நிலைப்பாட்டில் இருந்து சற்றே விலகியிருந்தாலும், சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை இன்றும் வலியுறுத்தும் கட்சிதான் சிவசேனா. ஆனால், பிரதான இந்துத்துவக் கட்சியான பாஜகவுடன் தற்போது பகையில் இருக்கிறது சிவசேனா.

கூட்டணியில் இருந்துகொண்டே தங்களை பலவீனப்படுத்த பாஜக முயன்றதாக சிவசேனா கட்சியினர் அதிருப்தியடைந்தது, இந்தப் பிரிவுக்குக் காரணம். 2019 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர், பாஜகவும் சிவசேனாவும் சுழற்சி முறையில் முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வது என ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்டுவிட்டது என்று சிவசேனா சொல்ல, பாஜக அதை மறுக்க, கூட்டணி உடைந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது சிவசேனா. அதற்குப் பின்னர், பாஜகவுடன் நெருங்குவது போன்ற தோற்றம் அவ்வப்போது உருவானாலும், நடப்பு அரசியலைப் பார்க்கும்போது பாஜகவுடன் சிவசேனா மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் குறைவுதான்.

ராவத்தின் முன்னெடுப்பு

மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைவதற்கு முன்பே ராகுல் காந்திக்கு ஆதரவாகப் பேசியவர் சஞ்சய் ராவத். சமீபத்தில் தனது மும்பை வருகையின்போது, மம்தா பயன்படுத்திய வார்த்தைகள் பாஜகவுக்குப் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், காங்கிரஸ் கட்சியினரைவிடவும் அதிகமாக ராகுல் மீது நம்பிக்கை வைத்து ராவத் பேசிவருகிறார். சற்று கூடுதலாகவே பேசினாலும் தனது அரசியல் நிலைப்பாடுகளில் மிகுந்த உறுதி காட்டுபவர் ராவத். அவரது ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தபூர்வமானது என்பதால், அவரது பேச்சுகள் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தத் தவறியதில்லை.

தேசிய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இடம் என்ன என மம்தா போன்றோர் கேள்வி எழுப்பினாலும், பல மாநிலங்களில் அந்தந்த மாநிலக் கட்சிகளுடன் கூட்டணியைத் தொடர்கிறது காங்கிரஸ். பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களையும் ஆள்கிறது. சஞ்சய் ராவத் சொல்வதுபோல், மகாராஷ்டிரத்தில் இருப்பது ஒரு மினி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான். அதை விஸ்தரிப்பதிலும் தேசிய அளவில் பலம்வாய்ந்ததாக ஆக்குவதிலும்தான் அந்தக் கூட்டணியின் எதிர்காலம் இருக்கிறது. ஆனால், மம்தா சொல்வதுபோல் அந்தக் கூட்டணி முற்றாக அழிந்துவிடவில்லை.

ராகுல் மீது எதிர்பார்ப்பு

அதேவேளையில், அதை விரிவுபடுத்த காங்கிரஸ் தரப்பிலிருந்து முயற்சிகள் அவசியம். சஞ்சய் ராவத் சொல்வதும் அதைத்தான். ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர் விரும்புகிறார். மகாராஷ்டிரத்தில் இருப்பது போல் தேசிய அளவிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்றால், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளிடம் ராகுல் பேசியாக வேண்டும். கட்சிக்குள் நிலவும் சிக்கல்களைக் களைந்து அடுத்த கட்டத்துக்குச் செல்லும் முனைப்பில் ராகுல் இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்ளும் சஞ்சய் ராவத், கூட்டணி விஸ்தரிப்பு தொடர்பான முன்னெடுப்புகள் அதிகாரபூர்வமாக நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.

சரத் பவார் போன்ற மூத்த தலைவர்கள் முன்னெடுத்தால் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்தை அடையலாம். சஞ்சய் ராவத் அதற்கான வேலைகளையும் தொடங்கிவிட்டார். சரத் பவாரைப் பெரிதும் மதிக்கும் மம்தா பானர்ஜி இந்த விஷயத்தில் இறங்கிவருவாரா என்பதுதான் முக்கியமான கேள்வி. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்த சிவசேனா, அதைக் காட்டவே அத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் அறிவித்தது. இப்போது அதேபோன்ற ஒத்துழைப்பை மம்தாவிடம் சிவசேனா எதிர்பார்க்கலாம்.

சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் மம்தா...
சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் மம்தா...

சஞ்சய் ராவத்தின் முயற்சிகளுக்கு சிவசேனா தலைமை ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. சரத் பவாரும் தடை சொல்லவில்லை. ராகுல் விரைவில் மும்பை சென்று கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸுக்கு எதிரான கட்சிகள் பிரிந்துகிடந்த சமயத்தில், பாஜகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. இன்று பாஜக பெரும் பலம் பெற்றுவிட்ட நிலையில், அக்கட்சிக்கு எதிரான கட்சிகள் பிரிந்து செயல்படுவது அக்கட்சிக்குச் சாதகமான சூழலைத்தான் ஏற்படுத்தும்.

சஞ்சய் ராவத்தின் முன்னெடுப்பில் காங்கிரஸுடன் நிறைய கட்சிகள் சேர்ந்தால், 2024 மக்களவைத் தேர்தலின் திசை மாறலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in