திரும்பப் பெறப்படுமா தேசத்துரோகச் சட்டப்பிரிவு?

திரும்பப் பெறப்படுமா தேசத்துரோகச் சட்டப்பிரிவு?

தேசத்துரோகச் சட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவு ஜனநாயகத்தின் நவீன யுகத்தில் மகத்தான தருணமாகப் பார்க்கப்படுகிறது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவு இந்தியா முழுவதும் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட பலருக்குப் பெரும் நிம்மதியளிக்கிறது.

ஜூலை மாதம் இவ்வழக்கின் அடுத்த விசாரணை நடக்கவிருக்கிறது. மத்திய அரசும் இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை அல்லது மறுஆய்வு செய்வதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. அதுவரை இந்தப் பிரிவின்கீழ் யார் மீதும் வழக்கு தொடரப்படாது என நம்புவதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்நிலையில், இந்தச் சட்டம் தொடர வேண்டுமா, வேண்டாமா எனும் விவாதமும் எழுந்திருக்கிறது.

என்ன சொல்கிறது இச்சட்டம்?

தேசத்துரோகச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 124ஏ பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. காலனிய ஆதிக்கக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் இன்றுவரை தொடரவேண்டியதன் அவசியம் என்ன என்பதே மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பும் கேள்வி. 1962-ல் கேதார் நாத் வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டப்பிரிவு செல்லும் எனத் தீர்ப்பளித்ததுடன், இந்தச் சட்டத்தின்கீழ் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்க சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. அரசை விமர்சிப்பது ஒன்றே தேசத்துரோகமாகிவிடாது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலோ அல்லது வன்முறையைத் தூண்டும் வகையிலோ இருந்தால் மட்டும்தான் தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

ஆனாலும், அரசுகளோ காவல் துறையினரோ இவ்விஷயத்தில் கூர்ந்த அவதானிப்புடன் செயல்பட்டதாகச் சொல்ல முடியாது. அரசை விமர்சித்தாலே அவர் மீது தேசத்துரோகச் சட்டம் பாயலாம் என்ற நிலைதான் நீடித்துவந்தது. இன்றைய தேதிக்கு ஏறத்தாழ 800 தேசத்துரோக வழக்குகள் நிலுவையில் உள்ளன. 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறையில் இருக்கிறார்கள். இவர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பாஜக தலைமையிலான மத்திய அரசு அமைந்த பின்னர் தேசத்துரோகக் குற்றச்சாட்டின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் என மனுதாரர்கள் சார்பில் வாதிட்ட கபில் சிபல் தெரிவித்திருக்கிறார். அதேசமயம், கட்சி வேறுபாடில்லாமல் கூடங்குளம் அணுமின் உலைக்கு எதிராகப் போராடிய ஆயிரக்கணக்கானோர் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தின்போதும் பலர் மீது இவ்வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

பிற நாடுகளில் என்ன நிலை?

காலனியாதிக்கத்தின்போது இந்தியாவில் தேசத்துரோகச் சட்டத்தைக் கொண்டுவந்த பிரிட்டன், 2009-லேயே இச்சட்டத்தை ரத்து செய்துவிட்டது. அடுத்த ஆண்டில் ஆஸ்திரேலியா இந்தச் சட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்குக் கடுமையான சட்டங்கள் கொண்ட சிங்கப்பூர்கூட கடந்த ஆண்டு தேசத்துரோகச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. அமெரிக்காவில் தேசத்துரோகச் சட்டம் அமலில் இருந்தாலும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

எது தேசத்துரோகம்?

இந்தியாவில் அரசுக்கு எதிரான விமர்சனங்களே தேசத்துரோகம் என்று கருதப்படுகிறதா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு சமீப காலத்தில் இச்சட்டப்பிரிவு மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசிய பத்திரிகையாளர் வினோத் துவா, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின்போது ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷமிட்ட அமுல்யா, விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது டூல்கிட் விவகாரத்தில் திஷா ரவி எனப் பலர் இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றியைக் கொண்டாடியது, ஃபேஸ்புக் பதிவுக்கு லைக் இட்டது போன்ற செயல்களுக்காகவும் தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்களில் ஏறத்தாழ 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீதும் இவ்வழக்கு பாய்ந்திருக்கிறது.

இந்தச் சட்டத்தை மறுஆய்வு செய்வதற்கான கால அவகாசம் குறித்து மத்திய அரசு தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை. சொல்லப்போனால் மத்திய அரசு இந்தச் சட்டத்தை ரத்து செய்யுமா அல்லது வலுவிழக்கச் செய்யுமா என்பதும் நிச்சயமில்லாததுதான். ஏனெனில், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து இதுபோன்ற தருணங்களில் லட்சுமண ரேகையை நினைவில் கொள்ள வேண்டும் என சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருப்பது உச்ச நீதிமன்றத்துக்கான மறைமுகச் சுட்டிக்காட்டுதலா எனும் விவாதமும் எழுந்திருக்கிறது.

நீடித்த சிக்கல்

இப்பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தால் ஜாமீன் கிடைக்காது என்பதால், குற்றவாளி அல்ல என நிரூபணமாகும் வரை சிறையில்தான் இருந்தாக வேண்டும் என்பதுதான் இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் முக்கிய வாதம். இந்த வழக்குகளில் கைதானவர்கள் நீதிமன்றத்தில் முறையிடலாமே என்று மத்திய அரசு முன்வைத்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. அது எல்லோருக்கும் சாத்தியமல்ல எனத் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருக்கிறது.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் முக்கியமானதொரு அம்சம், இச்சட்டப்பிரிவு மறுபரிசீலனை செய்யப்படும்வரை இப்பிரிவின் கீழ் யாரையும் கைதுசெய்யக் கூடாது என்பதாகும். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் அமன் சோப்ரா மீது ராஜஸ்தான் அரசு தொடர்ந்திருந்த தேசத்துரோக வழக்கு குறித்த விசாரணையை அம்மாநில உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்திருக்கிறது. மத்திய அரசு இந்தச் சட்டத்தை மறுஆய்வு செய்யும் வரை இந்தப் பிரிவின்கீழ் யார் மீதும் வழக்கு தொடர வேண்டாம் என்றும் மத்திய, மாநில அரசுகளிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்ட நிலையில், இந்த உத்தரவை ராஜஸ்தான் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா

தேசத்துரோகச் சட்டம் மட்டுமல்ல, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உபா), தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றவையும் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கான சட்ட உரிமைகளை மறுக்கும் வகையில் அமைந்திருப்பதாகத் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டுவருகிறது. பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காகவே இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப் படுகின்றன எனும் நிலையில், இவற்றையும் மறுஆய்வு செய்வது அவசியம் என்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.

அதேபோல ஆகஸ்ட் 26-ல் ஓய்வுபெறவிருக்கும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, அதற்குள் இவ்வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதற்கு முன், 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படவிருக்கும் தருணத்தில் இந்தச் சட்டத்தை நிரந்தரமாக நீக்கும் முடிவு எடுக்கப்பட்டால் அது மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அரசியல் ரீதியிலான ஆதாயங்களைப் பெற்றுத்தரலாம்.

விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதில் மோடி அரசுக்குப் பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. பட்டினிக் குறியீடு, கரோனா மரணங்கள், சிறுபான்மையினர் மீதான அத்துமீறல்கள் என எந்தப் பிரச்சினை குறித்து சர்வதேச அமைப்புகள் விமர்சனங்களை முன்வைத்தாலும் உடனடியாக எதிர்வினையாற்ற அரசுத் தரப்பு தயங்குவதில்லை. எனவே, இந்தச் சட்டம் திரும்பப் பெறப்படுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்.

ஒருவேளை, இந்தச் சட்டம் மறுஆய்வுக்குட்படுத்தப்பட்டு, மாற்றங்களுடன் தொடரவும் வாய்ப்பு இருக்கிறது. விதிகள் பெருமளவு தளர்த்தப்பட்டுவிட்டால், நிஜமாகவே தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், வெறுப்புக் கருத்துகளைப் பரப்புபவர்கள் போன்றோர் பலம்பெற்றுவிட வாய்ப்பு உண்டு என மற்றொரு தரப்பினர் சுட்டிக்காட்டுகிறார்கள். எனினும், தேசத்துரோகக் குற்றம் தொடர்பாக நீண்ட காலமாக நீடித்துவரும் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தேசப் பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம் என இரண்டு அம்சங்களையும் சமன்செய்யும் விதத்திலான தீர்வை நோக்கி மத்திய அரசு செல்வதற்கான வழியை உச்ச நீதிமன்றம் காட்டியிருக்கிறது.

அரசு எந்தத் திசையில் செல்லும் என்பது இன்னும் ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in