2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 1 லட்சம் ஷாகாக்கள்!

நூற்றாண்டு விழாவையொட்டி ஆர்எஸ்எஸ் திட்டம்
2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 1 லட்சம் ஷாகாக்கள்!

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா தொடங்கவிருப்பதையொட்டி ராஜஸ்தானின் ஜுன்ஜுனு நகரில், ஜூலை 7 முதல் 9 வரை அந்த அமைப்பின் அகில 'பாரதிய பிராந்த் பிரச்சாரக்' கூட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

1925-ல் ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் டாக்டர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார் (கே.பி.ஹெட்கேவார்) இந்த அமைப்பைத் தொடங்கினார். இந்நிலையில், 2025-ல் இதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தயாராகிவருகின்றனர். குறிப்பாக 2024-ல் மக்களவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் பாஜக மீண்டும் ஆட்சியமைப்பதற்கான திட்டங்களும் வகுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 1 லட்சம் ஷாகாக்கள் (பயிற்சிக்கூடங்கள்) தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி-யின் தேசிய நிறுவனச் செயலாளர் சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாடு முழுவதும் உருவாக்கப்படவிருக்கும் ஒரு லட்சம் ஷாகாக்கள் மூலம், சமூகத்தின் அனைத்துப் பிரிவின் வேர்களையும் சென்றடையும் வகையில் செயல்பட திட்டமிடப்பட்டிருக்கிறது” என்றார். சமூக விழிப்புணர்வுடன் கூடிய ஆக்கபூர்வமான சூழலை உருவாக்க இந்த முயற்சி எடுக்கப்படுவதாகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்துவருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது நாடு முழுவதும் 56,284 ஷாகாக்கள் செயல்பட்டுவருகின்றன. கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக ஷாகாக்கள் நடைபெறுவதில் சுணக்கம் ஏற்பட்டிருந்தது. தற்போது அவை மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in